தமிழ்நாடு

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு

ரூ.200 கோடி வங்கி மோசடியில் வழக்கு தொடர்பாக சென்னையில் இரண்டு நாட்களாக நடந்து வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு
சென்னையில் 2 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை நிறைவு
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதி பகுதியில் வசித்து வருபவர் தொழிலதிபர் ராமகிருஷ்ண ரெட்டி. இவர் மார்க் குருப் ஆஃப் கம்பெனி என்ற பெயரில் ரியல் எஸ்டேட், கட்டுமான நிறுவனம், இசைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ரஜினி ரெட்டி கல்பாக்கம் பகுதியில் உள்ள சொந்தமான இசை கல்லூரியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனை

தொழிலதிபர் ராமகிருஷ்ண ரெட்டி தொடர்புடைய நிறுவனங்கள் பல்வேறு மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.அதன் அடிப்படையில் நேற்று முன் தினம் காலை முதல் ராமகிருஷ்ண ரெட்டி வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

குறிப்பாக துப்பாக்கி ஏந்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் உதவியுடன் இந்த சோதனையானது நடைபெற்றது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது மார்க் குரூப் நிறுவனத்தின் ஜிஆர்கே ரெட்டி மற்றும் ரஜினிரெட்டி ஆகியோர் மீது சுமார் 200 கோடி ரூபாய் வாங்கி மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. வங்கியில் வாங்கிய நோக்கத்திற்கு பதிலாக வேறு காரணங்களுக்காக கடன் தொகையை பயன்படுத்தி காரணத்தினால் சட்டவிரோத பண பரிமாற்ற நடவடிக்கை அடிப்படையில் மார்க் குழுமம் தொடர்பான இடங்களிலும், சோதனை 2வது நாளாக நேற்றும் அமலாக்கத்துறை நடத்தியது.

பிரபல அரசியல்வாதியின் பினாமி

குறிப்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ராமகிருஷ்ண ரெட்டி வீட்டில் ஏற்கனவே கடந்த 2017ஆம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும் ராமகிருஷ்ணரெட்டி அரசியல் கட்சி தலைவர்கள் சிலருக்கு பினாமியாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் சொல்கிறது.

மார்க் குழும நிறுவனத்தை பண மதிப்பிழப்பின்போது ரூ.135 கோடி பணம் கொடுத்து பிரபல அரசியல்வாதி ஒருவர் வாங்கியதாக வருமானவரித்துறை சோதனைகளும் குறிப்பாக வருமான வரித்துறை அனுப்பிய 60 பக்க நோட்டீஸ் மூலமாக தெரியவந்ததாக கூறப்படுகிறது.

சோதனை நிறைவு

குறிப்பாக 1600 கோடி ரூபாய் அளவிற்கு பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி கொடுத்த விவகாரம் தொடர்பாக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்போது, பினாமி நிறுவனம் என தெரியவந்தது. பணமதிப்பிழப்பின்போது ரூ.115 கோடி வரை செலவழித்துள்ளது வருமான வரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேபோல் இரண்டாவது வழக்கு தொடர்பாகவும் அமலாக்கத்துறை 2- வது நாளாக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஐதராபாத்தை சேர்ந்த மோகன்லால் காத்ரி தொடர்பான மற்றொரு அமலாக்கத்துறை வழக்கில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கம் தம்புசாமி தெருவில் வசிக்கும் நகைக்கடை அதிபர் மோகன்லால் காத்ரி வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் சவுக்கார்பேட்டை பகுதியில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். சென்னையில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி வந்த சோதனை நிறைவடைந்தது.