அரசியல்

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா.. இன்று முக்கிய ஆலோசனை!
மத்திய உள்துறை அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில், இரவு 11.07 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்த்டைந்தார். சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, சுதாகர் ரெட்டி, சட்டமன்ற பா.ஜ.க. குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், கரு. நாகராஜன், நாராயண திருப்பதி உள்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இன்று (ஏப்.11) வெள்ளிக்கிழமை காலையிலிருந்து மாலை வரையில் நட்சத்திர ஒட்டலில் தமிழ்நாட்டில் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசுகிறார். அப்போது 2026ம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து முக்கிய சில முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருப்பதால், அதிமுக - பாஜக கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பாஜக கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், அப்போது தமிழ்நாட்டின் புதிய பாஜக தலைவர் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், இன்று (ஏப்.11) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனுக்களை மாநில தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.