அரசியல்

அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்- அமித்ஷா பதிவு

கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்- அமித்ஷா பதிவு
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் தங்களது கட்சியின் உள்கட்டமைப்பு பணியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஏப்.11) பாஜக மாநில தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார். பாஜக தலைவர்கள் அண்ணாமலை, எல்.முருகன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலையில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டது.

நாகேந்திரனுக்கு மட்டுமே அனுமதி

பாஜக மாநில தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார்? என நாளை மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான விழாவில் கலந்து கொள்ள டெல்லி தலைவர்கள் நாளை தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் தலைவர் பொறுப்புக்கு விருப்பமனு தாக்கல் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவரை தவித்து வேறு யாரும் விருப்பமனு தாக்கல் செய்ய வேண்டாம் என உறுப்பினர்களுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அமித்ஷா பதிவு

இந்நிலையில், அண்ணாமலையின் நிறுவன திறன்களை பாஜக பயன்படுத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரனிடம் இருந்து மட்டுமே பரிந்துரை பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் நிறுவனத் திறன்களை பாஜக பயன்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.