அரசியல்

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்

குடியரசு துணைத் தலைவர் ராஜினாமா குறித்து விசாரணை நடத்த வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைப்பது நோக்கம் அல்ல-திருமாவளவன்
பாஜக- அதிமுக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து
சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “மழைக்கால கூட்ட தொடரில் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ள தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

எதிர்க்கட்சிகள் கோரிக்கை

எஸ்.ஐ.ஆர். வாக்காளர்கள் பட்டியலில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். கிட்டத்தட்ட 50 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பீகாரில் மட்டுமல்ல தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் நடக்க கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இது மிக மோசமான மக்கள் விரோத நடவடிக்கை ஆகும். ஜனநாயக விரோத நடவடிக்கை. இது குறித்து தீவிரமாக விரிவாக இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

பஹால்காம் பயங்கரவாத தாக்குதல், சிந்தூர் நடவடிக்கை ஆகியவை குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேச வேண்டும். இந்த 2 கோரிக்கைகளை முன் நிறுத்தி இரு அவைகளிலும் கோரிக்கை எழுப்பி வருகிறோம். ஆனால் பாராளுமன்ற நிர்வாகம் உடன்பாடாததால் தினமும் வாசல்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்திய ஒன்றிய அரசு, நாடாளுமன்ற நிர்வாகம் இந்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும். விரிவாக விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

பெரும் அரசியல் சதி

குடியரசு துணைத் தலைவர் திடீரென பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.இது பெரும் அரசியல் சதி என்ற அயம் எழுந்து உள்ளது. அவராக செய்யவில்லை. கட்டாயப்படுத்தி கையொப்பம் பெற்று இருக்கிறார்கள் என்று அயம் எழுந்து உள்ளது. குடியரசு துணைத் தலைவர் பதவி விலகல் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும். மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு விசாரனை நடத்த வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி பல விமர்சனங்களை வைக்கிறார். அதை வரவேற்கிறோம். ஆனால் பா.ஜ.கவின் வழிகாட்டுதலின் படி இது போன்ற விமர்சனங்களை வைக்கிறாரோ என்ற அயம் எழுந்து உள்ளது.

அதிமுகவுடன் தோழமை உணர்வு

பா.ஜ.க.வை தான் கொள்கை பகையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி முன் நிறுத்துகிறது. அதிமுகவை அவ்வாறு முன் நிறுத்தவில்லை. பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்ட கூட்டணி கட்சிகள் பல என்ற சான்றுகளை காட்ட முடியும். கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்தி முதுகில் சவாரி செய்து அந்தந்த மாநிலங்களில் காலுன்றி வருகிறது. அதே யுக்தியை தமிழ்நாட்டில் பா.ஜ.க. கையாளுகிறது.

அதிமுகவை பயன்படுத்தி வளர துடிக்கிறது. அதிமுகவை பலவீனப்படுத்த துடிக்கிறார்கள். திமுகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதை விட அதிமுகவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் 2வது பெரிய கட்சி என்ற பதைப்பு தான் பா.ஜ.க.விற்கு மேலோங்கி உள்ளது. இதை தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது.

கூட்டணியை உடைப்பது நோக்கமல்ல

அதிமுகவுடன் தோழமை உணர்வு இருக்கிறது. அதிமுக பாழ்பட்டு சிதைந்து விடக்கூடாது என்ற பொறுப்புணர்வுடன் தான் சுட்டி காட்டுகிறோமே, தவிர அதிமுக மீதோ எடப்பாடி பழனிசாமி மீதோ எந்த காழ்ப்புணர்ச்சி இல்லை. திமுக கூட்டணியில் இருப்பதால் தான் அதிமுக, பா.ஜ.க.வை விமர்சிக்கிறோம் என்று கூறுகிறோம். திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் கொள்கைகளை வி.சி.க ஏற்காது. தொடர்ந்து விமர்சிப்போம்.

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் இல்லை. அதிமுக ஒரு திராவிடர் இயக்கம். எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்களை முன் நிறுத்தி இயங்குகிற இயக்கம். நட்புணர்வுடன் பேசுகிறோம். தேவையில்லை என்றால் பேச போவதில்லை. அதேபோல் அண்ணாமலை தலைவர் பதவியில் இல்லை என்பதை மறந்து பேசிக்கொண்டு இருக்கிறார்” என தெரிவித்தார்.