அரசியல்

மணல் கொள்ளை.. திராவிட மாடல் அரசின் பரிசு- அன்புமணி விமர்சனம்

தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மணல் கொள்ளை.. திராவிட மாடல் அரசின் பரிசு- அன்புமணி விமர்சனம்
Anbumani Ramadoss
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, அணையிலிருந்து காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு இன்று காலை முதல் வினாடிக்கு 1.26 லட்சம் கன அடிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி நீர் கடலில் வீணாக கலப்பதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில நாட்களாகவே அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் குறுவைப் பயிர்களுக்குப் போதிய அளவு தண்ணீர் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். நீர்நிலைகள் நிரம்பியிருப்பதால் பாசனத்திற்கான தண்ணீரின் தேவை குறைந்துவிட்ட நிலையில், அணையிலிருந்து தினமும் திறக்கப்படும் சுமார் 10.5 டி.எம்.சி (இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது) நீரில் கிட்டத்தட்ட 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலில் கலக்கும் நிலை உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பணைகள் அவசியம் - அன்புமணி வலியுறுத்தல்

"காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வாய்ப்பும், நில அமைப்பும் சரியாக உள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுவதன் வாயிலாகவும், காவிரியில் வரும் உபரிநீரை சேமிக்கும் வகையில் ஏரிகள் மற்றும் குளங்களுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவதன் வாயிலாகவும் ஒரே நேரத்தில் 25 முதல் 30 டி.எம்.சி வரை தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு அக்கறை காட்டாமல் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மணல் கொள்ளை: "திராவிட மாடல் அரசின் பரிசு"

அதே நேரத்தில், தடுப்பணைகளைக் கட்ட வேண்டிய இடங்களில் மணல் குவாரிகளை அமைத்து மணல் கொள்ளையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், கடலை ஒட்டிய பகுதிகளில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை பாழ்படுத்துதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதும், மணல் குவாரிகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதும் மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு ஆகும்.

திராவிட மாடல் அரசு இனியாவது திருந்த வேண்டும். மணல் கொள்ளைக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டுதல், நீர்நிலைகளை இணைத்து கொள்ளளவை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் காவிரி வீணாக கடலில் கலப்பதை ஓரளவாவது தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.