தமிழ்நாடு

அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லவிருந்த விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவசரகால கதவை திறக்கமுயன்ற மாணவர்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
Stir at Chennai airport
சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று துர்காப்பூர் செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகால கதவைத் திறக்கமுயன்ற ஐஐடி மாணவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் 158 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 164 பேர் ஏறி அமர்ந்தனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, ஓடுபாதையை நோக்கி நகரத் தயாரான நிலையில், திடீரென விமான கேப்டன் கேபினுக்குள் அவசரகால கதவு திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை ஒலித்தது.

உடனடியாகச் சுதாரித்துக் கொண்ட விமானி, விமானப் பணிப்பெண்கள் மூலம் அவசரகால கதவைத் திறக்க முயற்சித்தது யார் என்று ஆய்வு செய்தார். அப்போது, அவசரகால கதவு அருகே அமர்ந்திருந்த தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சர்க்கார் (27) என்ற பயணிதான் அதைத் திறக்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, சர்க்காரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சர்க்கார், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர் என்றும், சொந்த வேலையாக துர்காப்பூர் செல்வதாகவும் கூறினார்.

சர்க்கார் தனது செயலுக்கு விளக்கம் அளிக்கையில், தான் வேண்டுமென்றே அவசரகால கதவைத் திறக்க முயற்சிக்கவில்லை என்றும், கவனக்குறைவாக அவசரகால கதவைத் திறப்பதற்கான பொத்தானை அழுத்தி விட்டதாகவும், ஆனால் கதவு திறக்கப்படுவதற்கு முன்னரே தான் பொத்தானில் இருந்து கையை எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். இருப்பினும், விமானியும் பாதுகாப்பு அதிகாரிகளும் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் சர்க்காரின் துர்காப்பூர் விமானப் பயணத்தை ரத்து செய்தனர். அவர் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார். மேலும், விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த அவரது உடைமைகளும் கீழே இறக்கப்பட்டன.

பின்னர், இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் பயணி சர்க்காரை சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார் இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தால், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 157 பயணிகளுடன், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாகச் சென்னையில் இருந்து துர்காப்பூர் புறப்பட்டுச் சென்றது. இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.