அரசியல்

மை டியர் நண்பா.. MP-யாக பதவியேற்க போகும் கமலுக்கு ரஜினி வாழ்த்து!

வரும் 25ம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசன் பதவியேற்க உள்ள நிலையில், ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதுத்தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மை டியர் நண்பா.. MP-யாக பதவியேற்க போகும் கமலுக்கு ரஜினி வாழ்த்து!
Rajinikanth Congratulates Kamal Haasan Ahead of Rajya Sabha Oath-Taking
தமிழகத்தில் இருந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேப்போல் அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவடைகிறது.

இந்த காலியிடங்களை நிரப்ப ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கியது.

மாநிலங்களவை எம்பியான கமல்:

2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக, தலைவர் கமல் ஹாசன் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு ஏகமனதாக முடிவு செய்து அறிவித்தது.

திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். அதிமுக தரப்பில் வழக்கறிஞர் அணி செயலாளர் இன்பதுரை, செங்கல்பட்டு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

திமுக சார்பில் 3 பேரும், அதிமுக சார்பில் 2 பேரும், மநீம சார்பில் ஒருவரும், சுயேட்சைகள் 7 பேர் என மொத்தம் 13 நபர்கள் மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழியாத சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் கமல்ஹாசன் உள்பட 6 பேரும் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ரஜினியுடன் சந்திப்பு:

வருகிற 25-ஆம் தேதி மாநிலங்களவை எம்பியாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பதவியேற்பார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தனது திரையுலக நண்பரான நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் உலகநாயகன் கமல்ஹாசன். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.



தமிழ்நாட்டில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது இந்திய அரசியலமைப்பின் விதிகளின் படியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் விதிகளின் படியும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.