அரசியல்

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்

வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்- அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss
பாட்டாளி மக்கள் கட்சி 37 ஆம் ஆண்டு விழாவை ஒட்டி அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டி, ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்” என்று தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு அரணாக இருக்கும் பாமக

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை.

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி. தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும்.

ஆளும் அரசில் பங்கேற்க வேண்டும்

தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 11 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார். “தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும், மக்களுக்காக களத்தில் இறங்கி போராடுவதில் அன்றும் இன்றும் பாட்டாளி மக்கள் கட்சி தான் உண்மையான எதிர்க்கட்சியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், ஓர் அரசியல் கட்சி மக்களுக்கான உரிமைகளை போராடிப் பெற்றுக் கொடுக்கும் நிலையிலேயே தொடர முடியாது. மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் நிலையை எட்ட வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம்.

அந்த இலக்கை நோக்கிய பயணத்திற்காகத் தான் நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கிறோம். வலிமையான சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.