அரசியல்

நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை

அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள இபிஎஸ் காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக்கொடுப்போம் என செல்வப்பெருந்தகை கருத்து

  நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்- செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
வேலூரில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் வாக்கை திருடும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தேர்தல் காலத்தில் அதனை தெரிவிப்போம்.

வாக்காளர் பட்டியல்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்களை கேட்டால், இல்லை என்று கூறுகிறார்கள். அப்படியானால் எங்கே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது?

அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது என பாஜக கூறுகிறது. ஆனால் வாக்காளர் தொடர்பான தரவுகளை கேட்டால் இல்லை என்று கூறுகிறார்கள். ஜிஎஸ்டி வரிக்குறைப்பு ஒரு சாதனை என்று பாஜகவை தரப்பில் கூறப்படுகிறது குறித்த கேள்விக்கு, ஜிஎஸ்டி என்பதை நாங்கள் தொடர்ந்து 8 வருடங்களா சொல்லிக்கொண்டு வருகிறோம். ஜிஎஸ்டி என்பது காங்கிரஸ் கொண்டு வந்தது என்று கூறி வருகிறோம். குஜராத் முதலமைச்சராக இருந்தவர் தற்போது பிரதமராக ஆக இருக்கிற நரேந்திர மோடி எதிர்த்தார்.


ஜிஎஸ்டி வரி

ஜிஎஸ்டியை இந்தியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். கடைசிவரை எதிர்த்து தான் பிரதமராக வந்தார். அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஜிஎஸ்டியை விடவே மாட்டேன் என்று கூறினார்கள்.

காங்கிரஸ் சொன்னது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி. அதற்கு மேல் மக்கள் தாங்க மாட்டார்கள் என்று கூறினோம். ஆனால் பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ஜிஎஸ்டி 40 சதவீதம். ஐரோப்பா கண்டத்திலும், அமெரிக்காவிலும், இதனை தாங்குவார்கள். நம்முடையது வளரும் நாடு. 18 விழுக்காடு மேல் போக வேண்டாம் என்று கூறினோம். ஆனால் மோடி அரசு 40 விழுக்காடு போட்டார்கள். அதன் காரணமாக மருத்துவமனைக்கு உயிர் காக்க போனாலும் ஜிஎஸ்டி. மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வாங்கினாலும் ஜிஎஸ்டி. பெண்களுக்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்றாலும் ஜிஎஸ்டி என ஜிஎஸ்டியை கொண்டு வந்தார்கள். இதுகுறித்து உலக அறிஞர்கள் இந்தியாவின் பொருளாதாரம் எப்படி உள்ளது என ஆய்வுகளை செய்தார்கள்.

மக்கள் சிறு சேமிப்பு காலி

அதில் ஜிஎஸ்டி வந்த பிறகு இந்தியாவினுடைய மக்கள் சிறு சேமிப்பு காலியாகிவிட்டது. அதற்கு கூடுதலாக இப்பொழுது கடன் சுமையை சுமந்து கொண்டிருக்கிறார்கள் என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.அதன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி நிலையில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் விழித்துக்கொண்ட மோடி 8 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சொன்னதை கேட்காமல், இப்பொழுது 18 விழுக்காடு என்று திரும்புகிறோம், குறைக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அப்போ 8 ஆண்டுகளாக மக்கள் பட்ட வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் யார் பதில் சொல்வது. சுமார் 60 லட்சம் கோடிக்கு மேல் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்துள்ளார்கள். யாருக்காக இந்த வரி அம்பானி அதானிக்காக தான். ஆகவே இதனை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார்.

இபிஎஸ்க்கு கற்றுக்கொடுப்போம்

மேலும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, அவருடைய ஆட்சியில் எப்படி சட்டம்-ஒழுங்கு இருந்தது, எப்படி சட்டமன்ற பாதுகாக்கப்பட்டது. அதையெல்லாம் புள்ளி விவரத்துடன் வெள்ளை அறிக்கையுடன் எடப்பாடி பழனிச்சாமியை உட்கார சொல்லுங்கள். தற்போதுள்ள ஆட்சியாளர்களும் உட்காரட்டும் நாட்டு மக்களுக்கு சொல்லட்டும். எடப்பாடி பழனிசாமி எப்போது முதலமைச்சர் ஆக வந்தார். நாட்டு மக்களுக்கு என்னென்ன செய்தார்.

ஒரு மாதத்திற்கு என்ன என்ன அசம்பாவிதங்கள் நடந்தன. வருடத்திற்கு எத்தனை அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. அவர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு எத்தனை சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துள்ளது. இதையெல்லாம் அவர் சொல்லட்டும், சொல்லி பிறகு திமுக அரசு மீது குற்றம் சொல்லட்டும். அரசியலுக்காக எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. அரசியலைப் பற்றி தெரிந்துக்கொள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் வந்தால் சொல்லிக் கொடுப்போம் என்றார்.

இபிஎஸ் பேச்சு வன்மத்தை காட்டுகிறது

அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் பேசியது நியாயமா பத்திரிகையாளர்களே நீங்களே சொல்லுங்கள். ஒரு தலைவரை குறித்து அரசியல் நாகரீகம் இல்லாதவர் கூட அவர் போன்று வார்த்தையை பயன்படுத்த மாட்டார்கள்.ஆனால் இந்த வார்த்தையை பயன்படுத்தலாமா?

ஒரு கட்சி தலைவரைப் பார்த்து பிச்சைக்காரன் ஒட்டு போட்ட சட்டைக்காரன் என்றெல்லாம் பேசலாமா? அவருடைய பேச்சு. எதைக் குறிக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரின் பேச்சு வன்மத்தை காட்டுகிறது.அவருக்கு பேச தெரியவில்லை. வயதானவர் அவரை மன்னித்து விடுவோம். விட்டுவிடுங்கள் என்றார்.

கூட்டணியில் சங்கடங்கள் ஏற்படும்

ஜிஎஸ்டி வரி குறைந்தது பற்றி பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் துணிக்கடைகளுக்கு சென்று பார்வையிட்டு வருகிறாரே என்ற கேள்விக்கு, கடந்த 8 ஆண்டுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு யார் பதில் சொல்வது.இதுவரை பிரதமர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.பாதிப்பு பாதிப்பு தானே. 60 லட்சம் கோடி வசூல் செய்துள்ளார்கள். அது எங்கு சென்றது. அதற்கெல்லாம் ஏன் பதில் சொல்லவில்லை. மக்களுடைய வரி பணம் தானே, மக்கள் எல்லாம் இன்று கடனாளியாக உள்ளனர். மக்களுக்கான அரசாக இருக்கும்பொழுது அதை தெரிவிக்க வேண்டும். மக்கள் எந்த அளவுக்கு சிரமத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து பலர் விலகி பல கட்சிகளில் சேருகின்றார்களே என்ற கேள்விக்கு, கட்சிக்காரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்கு முன்பு ஒதுங்கி விட்டார்கள். அதன் பிறகு எந்த கட்சியில் வேண்டுமானாலும், சென்று சேர்ந்து விடுகிறார்கள்.ஆனால் எங்களுடைய வேண்டுகோள். காங்கிரஸ் கட்சியிலிருந்து வருபவர்கள் தோழமைக் கட்சிக்காரர்கள் சேர்க்கக்கூடாது. ஆனால் நாங்கள் தோழமைக் கட்சியிலிருந்து வருபவர்களை சேர்ப்பதில்லை. கூட்டணியில் சங்கடங்கள் ஏற்படும் என்பதால் நாங்கள் சேர்ப்பதில்லை. அதேபோல கூட்டணி உள்ள கட்சிகளும் இருக்க வேண்டும். அதுதான் தர்மம் என்றார்.

காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள்

காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளை மீண்டும் போட்டியிட கேட்பீர்களா என்ற கேள்விக்கு, உங்களுடைய விருப்பத்தை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்றார். காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சிக்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு, காங்கிரசை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை.அதனால் விஜய் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் இந்த தேசத்திற்கான கட்சி. மக்களுக்கான கட்சி. காங்கிரசை விமர்சிப்பவர்கள் வன்மமிக்கவர்களாக இருப்பார்கள். நல்லவர்கள் யாரும் காங்கிரசை விமர்சிக்க மாட்டார்கள் என்றார்.

விஜய்யுடன் கூட்டணி சேர்வதைப்போல பேசப்படுகிறது என்ற கேள்விக்கு, இல்லை என்று கூறினார். மேலும், அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்று பேசப்படுகிறது.அது அவருடைய விருப்பம் அவர் தொடங்கலாம் என தெரிவித்தார்.