அரசியல்

தமிழருக்கு வாக்களித்த தருமருக்குப் பாராட்டுக்கள் - நயினார் நாகேந்திரன் ஆவேச பேட்டி!

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழருக்கு வாக்களித்த தருமருக்குப் பாராட்டுக்கள் - நயினார் நாகேந்திரன் ஆவேச பேட்டி!
தமிழருக்கு வாக்களித்த தருமருக்குப் பாராட்டுக்கள் - நயினார் நாகேந்திரன் ஆவேச பேட்டி!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், துணை குடியரசுத் தலைவர் தேர்தல், சட்டம்-ஒழுங்கு, மற்றும் தமிழக அரசியல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.

துணை குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்துப் பேசிய அவர், “தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்துள்ளார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள்,” என்று கூறினார். மேலும், வரவிருக்கும் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் இருப்பதால், பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி பயணம் குறித்துக் கேட்டபோது, “செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது,” என்று நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

தமிழக அரசு மீது கடும் குற்றச்சாட்டுகள்

“தமிழ்நாடு காவல்துறை தி.மு.க. அரசின் ஏவல் துறையாக உள்ளது,” என நேரடியாகக் குற்றம்சாட்டிய அவர், “தனிப்பட்ட முறையில் என்னைச் சந்தித்த இரண்டு காவல்துறை அதிகாரிகளைப் பணி மாற்றம் செய்துள்ளனர்,” என்றார். 10 வயதுப் பெண்கள் முதல் 70 வயதுப் பெண்கள் வரை பாலியல் துன்பத்தை அனுபவிப்பதாகவும், சுதந்திரம் அடைந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுதான் மிக மோசமான ஆட்சி என்றும் அவர் சாடினார்.

வேலூர் இப்ராஹிம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டிப்பதாகவும், அதேபோல் அடித்தவர்கள் மீது வழக்கு இல்லாமல், அடிபட்டவர்கள் மீது மட்டும் வழக்கு உள்ளதாகவும் குறிப்பிட்டு, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி குறித்த விமர்சனம்

“வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்கிற உணர்வு வராது,” என்று நயினார் நாகேந்திரன் கூறியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.