அரசியல்

மனிதர்களை கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? டிடிவி தினகரன் கேள்வி

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனிதர்களை கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? டிடிவி தினகரன் கேள்வி
TTV Dhinakaran
நாமக்கல் அருகே சட்டவிரோதமாக நடைபெற்ற சிறுநீரகத் திருட்டில் திமுக நிர்வாகிக்குத் தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டிய டிடிவி தினகரன், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதர்களையும் கடிக்கத் திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வரும் ஏழைத் தொழிலாளர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சிறுநீரக திருட்டு- திமுக நிர்வாகிக்கு தொடர்பு

வேலைவாய்ப்பில்லாமல் வறுமையில் வாடும் எளிய மக்களிடமிருந்து சட்டவிரோதமாகக் கொள்ளையடிக்கப்படும் சிறுநீரகங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் பல லட்ச ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்படுவதன் பின்னணியில் திமுக நிர்வாகி ஒருவர் இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கும், போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையிலும் தொடர்பிலிருந்த திமுகவினர், தற்போது சட்டவிரோத சிறுநீரகத் திருட்டு சம்பவங்களுக்கும் இடைத்தரகர்களாகச் செயல்பட்டிருப்பதன் மூலம், ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியாக மனிதனையும் கடிக்கும் சூழலுக்கு திமுகவினர் துணிந்துவிட்டனரா? என்று கேட்கத் தோன்றுகிறது.

குழு அமைக்க வேண்டும்

எனவே, ஏழைத் தொழிலாளர்களிடம் சட்டவிரோதமாகச் சிறுநீரகத்தைக் கொள்ளையடித்த கும்பல், இடைத்தரகாக செயல்பட்ட திமுக நிர்வாகி, உடந்தையாக இருந்த தனியார் மருத்துவமனைகள் உட்பட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிறுநீரகத் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் குழு அமைத்துக் கண்காணிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.