அரசியல்

பேனா சிலைக்கு நிதி, வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் விளம்பர மாடல் ஆட்சி என நயினார் நாகேந்திரன் விமர்சனம்

  பேனா சிலைக்கு நிதி, வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா?- நயினார் நாகேந்திரன் கேள்வி
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முதலமைச்சர் முகஸ்டாலின்
பேனா சிலைக்கும், கார் ரேசுக்கும் இருக்கும் நிதி, கட்டளை வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு இல்லையா? என தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

பயிர்கள் வாடி வதங்கும் நிலை

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களின் பாசன ஆதாரமாகத் திகழும் கட்டளை வாய்க்காலின் புனரமைப்புத் திட்டத்தை நிதிப் பற்றாக்குறை என்று கூறி 2021-ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தி, விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது திமுக அரசு.

புனரமைப்புத் திட்டத்தைக் கைவிட்ட காரணத்தால், புதர் மண்டிக் கிடப்பதோடு. செடி கொடிகள் வளர்ந்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வருவதில் சிரமமாகி பயிர்கள் வாடி வதங்கும் நிலை உருவாகியுள்ளது.

வீண் ஆடம்பர விளம்பரங்களுக்கு செலவு

பருவமழைப் பொய்த்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே சாகுபடிக்காக விவசாயிகள் நம்பி வரும் வேளையில், வாய்க்காலைப் புனரமைக்காமல் காலந்தாழ்த்துவது முறையா?

பேனா சிலை, கார் ரேஸ் என பல வீண் ஆடம்பர விளம்பரங்களுக்கு செலவு செய்யத் தயாராக இருக்கும் திமுக அரசு, உழவர் நலனைக் காப்பதற்காக மட்டும் செலவு செய்ய யோசிப்பது ஏன்? நான்காண்டுகளாக உழவர் நலனைக் கண்டுகொள்ளாது இத்திட்டத்தைக் கிடப்பில் போடுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியா?

விவசாயிகள் விரட்டியடிப்பர்

விவசாயிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட கண்டுகொள்ளாது, மேடைகளில் மட்டும் "நானும் டெல்டாக்காரன் தான்" என்று முழங்கும் இந்த விளம்பர மாடல் ஆட்சியை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகள் விரட்டியடிப்பர் என்பது உறுதி!” என பதிவிட்டுள்ளார்.