அரசியல்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- ராகுல் காந்தி புறக்கணிப்பு

டெல்லி செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே புறக்கணித்துள்ளனர்

சுதந்திர தின விழா கொண்டாட்டம்- ராகுல் காந்தி புறக்கணிப்பு
சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புறக்கணிப்பு
79வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் மரியாதை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் மோடி ஏற்றினார்.

ராகுல் காந்தி புறக்கணிப்பு

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளதற்கு பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து எதிர்க்கட்சியிடமிருந்தோ அல்லது இரு தலைவர்களிடமிருந்தோ அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இருக்கை ஏற்பாட்டில் அதிருப்தி அடைந்ததால் ராகுல்காந்தி இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே இரு தலைவர்களும் சமூக ஊடகங்களில் நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி அனைத்து குடிமக்களுக்கும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

சுதந்திர தின வாழ்த்து

"சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள்மூலம் அடையப்பட்ட இந்தச் சுதந்திரம், உண்மை மற்றும் சமத்துவத்தின் அடித்தளத்தில் நீதி தங்கியிருக்கும், ஒவ்வொரு இதயமும் மரியாதை மற்றும் சகோதரத்துவத்தால் நிரப்பப்பட்ட ஒரு இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதிமொழியாகும். இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தின் பெருமையையும் கௌரவத்தையும் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். ஜெய் ஹிந்த், ஜெய் பாரத்!" என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

"நமது ஜனநாயகத்தால் போற்றப்படும் சுதந்திரம், நீதி, சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தின் மதிப்புகளுக்கு நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வதற்கான ஒரு புனிதமான சந்தர்ப்பம் சுதந்திர தினம்" என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மல்லிகார்ஜூன கார்கேவும், தலைநகரில் உள்ள இந்திரா பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராகுல்காந்தியும் கலந்து கொண்டனர்.

இருக்கை சர்ச்சை

இருப்பினும், பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி இந்த நிகழ்வில் இல்லாதது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஆண்டு, சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது, பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளுக்குப் புறம்பாக, செங்கோட்டையில் நடந்த நிகழ்ச்சிக்காக, கேபினட் அமைச்சர் அந்தஸ்தை அனுபவிக்கும் ராகுல்காந்தி, இரண்டாவது கடைசி வரிசையில் அமர்ந்தபோது ஒரு சர்ச்சை வெடித்தது.

காங்கிரஸ் எம்.பி.க்கு இடம் ஒதுக்கப்பட்டது மக்களை அவமதிக்கும் செயல் என்று எதிர்க்கட்சிகள் கூறியது, நிகழ்வை ஏற்பாடு செய்த பாதுகாப்பு அமைச்சகம் இதை மறுத்தது.
மரபுப்படி, நிகழ்ச்சியின்போது எதிர்க்கட்சித் தலைவர் முன் வரிசையில் அமர்ந்திருப்பார். கடந்த ஆண்டு, அந்த வரிசையில் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா மற்றும் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சி கேள்வி

இந்திய ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பின்னால், ஐந்தாவது வரிசையில் ராகுல்காந்தி அமர்ந்திருப்பதைக் காண முடிந்தது. நட்சத்திர இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங், மற்றும் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் மற்றும் கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் உள்ளிட்ட ஹாக்கி வீரர்கள் அவருக்கு முன்னால் அமர்ந்திருந்தனர்.
"ஒலிம்பிக் வீரர்கள் எல்லா மரியாதைக்கும் தகுதியானவர்கள் என்றாலும், அமித்ஷா அல்லது நிர்மலா சீதாராமன் போன்ற கேபினட் அமைச்சர்கள் எப்படி அவர்களுக்கு முன்னால் முன் வரிசையில் இருக்கைகளைப் பெறுகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" காங்கிரஸ் தலைவர் கே.சி. வேணுகோபால் முன்னதாக கேள்வி எழுப்பி இருந்தார்.