அரசியல்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி- அண்ணாமலை

“கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு மாற்றியதில் மகிழ்ச்சி- அண்ணாமலை
Annamalai
கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசல் வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றியிருப்பது குறித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (அக். 13) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

சிபிஐ விசாரணைக்கு வரவேற்பு

கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியிருப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்த அண்ணாமலை, இது கட்சி சம்பந்தப்பட்டது அல்ல, 41 உயிர்கள் சம்பந்தப்பட்டது என்று குறிப்பிட்டார்.

"யார் மீது தவறு இருக்கிறது, என்ன நடந்தது என்பதைச் சிபிஐ முழுமையாக விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரணை வேண்டுமென்று சொன்னது பாஜக தான். இந்த வழக்கை அரசியல், ஆளும் கட்சி, தமிழக வெற்றிக் கழக வழக்கு என்று மூடி மறைக்கக் கூடாது" என்று அவர் வலியுறுத்தினார்.

உயர் நீதிமன்றம் குறித்த கருத்து

உயர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது குறித்துப் பேசிய அவர், "சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணைக்கு உத்தரவிட்டதில் நீதிபதிகளைப் பற்றிச் சாமானிய மனிதர்களாக நாங்கள் ஒருபோதும் குறை சொல்லப் போவதில்லை. அவர்கள் தங்களது கடமையைச் செய்கிறார்கள். சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது, அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள். நாங்கள் இதில் பதில் சொல்வது சரியாக இருக்காது" என்று கூறினார்.

பாதிக்கப்பட்டோரை ஏமாற்றியது யார்?

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஏமாற்றி கையெழுத்து வாங்கி தவெக வழக்கு தொடர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய அண்ணாமலை, "இது தவறு. அதனை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். யார் அப்படிச் செய்தார்களோ அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "இன்று வந்திருக்கும் தீர்ப்பு எல்லோரையும் சமாதானப்படுத்தும் விதமாக அதே சமயம் நியாயத்தராசு நடுநிலையாக (Balance of Justice) என்று தான் சொல்ல வேண்டும். கரூர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, 2 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமித்ததை நாங்கள் வரவேற்கிறோம்" என்றும் தெரிவித்தார்.

திமுக மற்றும் சீமானுக்குப் பதிலடி

சிபிஐ விசாரணைக்குச் சீமான் எதிர்ப்பு தெரிவித்ததை விமர்சித்த அண்ணாமலை, "சிபிஐ விசாரணை செய்தால் மாநிலத் தன்னாட்சிக்கு எதிராக இருக்கிறது என்று சீமான் ஏன் இப்படிப் பதட்டப்படுகிறார் என்று தெரியவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

திமுக மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை, "முதலமைச்சராக அஜித் குமார் வழக்கைச் சிபிஐ விசாரணைக்குக் கொடுத்தவர்கள் ஏன் இந்தக் கரூர் விவகாரத்துக்குக் கொடுக்கவில்லை? இப்போது மட்டும் ஏன் மாற்றிப் பேசுகிறார்கள்? அஜித் குமாருக்கு ஒரு நியாயம், கரூரில் இருக்கக்கூடிய 41 குடும்பத்திற்கு ஒரு நியாயமா? இதில் அரசியல் செய்வது நாங்களா, தமிழக முதலமைச்சரா? மக்களுக்குத் தெரியும் சிபிஐயை வைத்து அரசியல் செய்வது திமுக தான்" என்று குற்றம் சாட்டினார்.

விஜய்யின் கரூர் பயணம்

கரூர் விவகாரத்தில் தொடர்ந்து பேசிய அவர், "கரூரில் வருகின்ற 17ஆம் தேதி விஜய் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார் எனக் கூறி நிறையத் திருமண மண்டபத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பாஜக-வை சேர்ந்தோரின் திருமண மண்டபங்களிடமும் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களிடம் கொடுக்கலாமா என்று கேட்கும் போது கூட, இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறோம். விஜய் அங்கே செல்வது அவரது உரிமை, காவல்துறை அனுமதி கொடுப்பது அவர்களது கடமை" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.