அதிமுக-பாஜக கூட்டணி
சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேற்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.
ஜெயலலிதா இருந்த காலம் முதலே அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது. தேசிய அளவில் மோடி தலைமையிலும், மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம். 1998 முதல் அதிமுகவுடன் பாஜக தொடர்ந்து கூட்டணி அமைத்து வருகிறது. பாஜக –அதிமுக கூட்டணி 30 இடங்களை கைப்பற்றிய காலம் உண்டு. 2026 சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சியை அமைக்க போகிறது.
பிரதமருக்கு இபிஎஸ் நன்றி
சனாதனம், தொகுதி மறுவரையறை கொள்கை போன்ற பல்வேறு பிரச்சனைகளை திமுக எழுப்பிக் கொண்டிருக்கிறது. திமுகவின் ஊழல்களை மறைக்க இதுபோன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகின்றன. அதிமுக எந்தவிதமான நிபந்தனையும் வைக்கவில்லை. இது இயல்பாக அமைந்த கூட்டணி. இந்த கூட்டணி இரண்டு கட்சிகளுக்கும் பலனளிக்கக் கூடியது என தெரிவித்தார்.
இதனால் தமிழகத்தில் 2026ல் அதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், என்.டி.ஏ கூட்டணியில் மீண்டும் இணைந்து பணியாற்றுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ பிரதமர் நரேந்திர மோடியின் அசைக்க முடியாத ஆதரவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளிப்படையான வளர்ச்சி
அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கூட்டணி அமைத்துக் கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கூட்டணி இது. இந்த முக்கியமான தருணத்தில், பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், மக்களின் எண்ணங்களை நனவாக்குவதற்கும், அவர்களின் மாற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பதற்கும் அதிமுக NDA கூட்டணிக் கட்சிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும்.
குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தவறான நிர்வாகம் இல்லாத ஒரு சிறந்த தமிழ்நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். தமிழக மக்கள் வெளிப்படையான, வளர்ச்சியை மையமாகக் கொண்ட அரசாங்கத்திற்கு தகுதியானவர்கள் - மேலும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அதை வழங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
திமுகவை வீழ்த்து முக்கியமானது
இதை வரவேற்கும் வகையில் பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகவை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “வலுவாக இணைவோம், தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற குடும்பத்தில் அஇஅதிமுக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இதர கூட்டாளிகளுடன் ஒன்றிணைந்து, நாம் தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்குக் கொண்டுசெல்வோம்; மாநிலத்திற்கு அயராது பாடுபடுவோம்.
மாமனிதர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தும் ஓர் அரசை நாம் உறுதிசெய்வோம். தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும்” என தெரிவித்துள்ளார்.