சென்னை நங்கநல்லூரில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் போன்றவை பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது, “தமிழக அரசியலில் எதிர்மறை அரசியலை ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்கிறார். பிரதமர் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க வேண்டும். சிலிண்டர் விலை உயர்வை பார்த்து வயிறு எரிகிறது என கூறுகிறார். பால் விலை, மின்சார கட்டணம், வீட்டு வரி, தண்ணீர் கட்டணம் உயர்ந்த போது என்ன எரிந்தது?
விலை உயர்வை நியாயம் எனக் கூறவில்லை 62 சதவிகிதம் தேசிய சந்தையில் விலை உயர்ந்துள்ளதால் மிகக் குறைந்த அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் பாஜக தமிழக மகளிர் அணி ஐம்பது ரூபாய் உயர்வு வேண்டாம் என பெட்ரோலிய அமைச்சருக்கு கடிதம் எழுத இருக்கிறோம். தேர்தல் வரும் பொழுது கூட்டணி பற்றி பேசுவோம். தமிழக அரசு தான் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதை மக்கள் புரிந்து கொள்வார்கள். விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்றவும் தெரியும், ஆனால் அரசியலில் ஒன்றும் தெரியாது” என்று கூறினார்.
ஆளுநர் மசோதாவை நிராகரித்தது குறித்து நீதிமன்றம் தெரிவித்துள்ள தீர்ப்பு குறித்து கேட்டபோது, “நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை” என தெரிவித்தார்.
மேலும், தப்பு செய்தால் பணத்தை கணக்கில் காட்டவில்லை என்றால் அமலாக்கத்துறை சோதனை நடக்கத்தான் செய்யும். பாஜகவின் மாநில தலைவர் உறவினர் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. அதன் பிறகு எப்படி பாஜகவின் கைக்கூலியாக ஒரு துறை செயல்படுகிறது என கூற முடியும். இது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு. எங்கெல்லாம் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் கண்டிப்பாக வருமான வரித்துறை சோதனை நடக்கும். செந்தில் பாலாஜி போன்ற ஒரு அமைச்சரை வைத்துக்கொண்டு சட்டத்துறை அமைச்சர் ஒரு புது துறையின் மீது இப்படி குற்றம் சாட்டலாமா? ஒவ்வொரு அமைச்சரின் வீடு மற்றும் கல்லூரியை போய் பாருங்கள். அமைச்சரின் சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் அவர்கள் இவ்வளவு வசதியாக இருக்கிறார்களா என்று கேளுங்கள்
விஜய் களத்தில் இல்லை என கூறுகிறீர்கள். அவருக்கு பாதுகாப்பு ஏன் கொடுக்கப்பட்டது என கேட்டபோது, “களத்தில் இல்லை என்றாலும் யாரெல்லாம் கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்படும். அதுமட்டுமின்றி அவர் வெளியே வரும்போது நடிகர் என்பதால் கூட்டம் அதிகமாக கூடுவதால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாஜகவில் அங்கீகாரம் வழங்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு, “அதிகப்படியான சிறுபான்மையினர் எங்களை நம்பி கட்சியில் சேரட்டும் கண்டிப்பாக கொடுப்போம். இப்பொழுது இருக்கும் சிறுபான்மையினர்களுக்கும் நாங்கள் பதவி கொடுத்துள்ளோம். ஆ.ராசாவின் 2ஜி வழக்கு இன்னும் முடியவில்லை. இவர்கள் எல்லாம் தீ பறக்க பேசி பேசி முதலமைச்சரை ஒழிக்க போகிறார்கள். பேச மட்டும் தான் செய்ய முடியும் வேறு எதுவும் இவர்களால் செய்ய முடியாது. முதலில் ஒரு சட்ட திருத்தத்தைப் பற்றி நன்றாக படித்துவிட்டு அதன் பிறகு கூற வேண்டும் என்று பேசினார்.
அரசியல்
விஜய்க்கு ஏமாற்ற தெரியும் அரசியல் தெரியாது- தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேட்டி
விஜய்க்கு சினிமாவில் நடிக்க தெரியும், வசனம் பேச தெரியும், டான்ஸ் ஆட தெரியும், ஏமாற்றவும் தெரியும், ஆனால் அரசியலில் ஒன்றும் தெரியாது என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.