அரசியல்

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்

ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
ஆளுநரை தபால்காரர் என முதல்வர் கூறுவதா? நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தங்களது உட்கட்சி கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலத் தலைவருக்கான பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே வேட்புமனு பெறப்பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார்.

ஆனால், பாஜக மாநிலத் தலைவருக்கான வேட்மனு தாக்கல் செய்ய நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே தலைமை அனுமதி வழங்கியதாகவும் மற்ற நபர்களை தாக்கல் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஆளுநர் என்பவர் மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம், அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் என கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல" என தெரிவித்தார். தொடர்ந்து ரோப்கார் வழியாக மலைக் கோயிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பின்னர் திண்டுக்கல்லில் நடைபெறும் கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.