இந்தியா

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!

குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!
Controversial posters pasted in Gujarat
குஜராத் மாநிலம், அகமதாபாத் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலைப் பாதுகாப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.

"இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்படலாம்," "இருட்டான ஆள்நடமாட்டமற்ற பகுதிகளுக்குப் பெண் நண்பர்களை ஆண் நண்பர்கள் அழைத்துச் செல்ல வேண்டாம். அங்கு உங்கள் பெண் நண்பர்கள் பாலியல் வன்கொடுமை அல்லது கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் என்ன ஆகும்?" போன்ற வாசகங்கள் அந்த போஸ்டர்களில் அச்சிடப்பட்டிருந்தன.

எதிர்க்கட்சிகள் கண்டனம்

மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்களுக்குப் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. பாலியல் வன்கொடுமையைத் தவிர்க்கப் பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கண்டனங்கள் எழுந்ததை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்தப் போஸ்டர்களை காவல்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக அகற்ற உத்தரவிட்டுள்ளனர். போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று அவர்கள் தெரிவித்தனர்.

அனுமதி மீறிய தனியார் தொண்டு நிறுவனம்

இதுகுறித்து விளக்கமளித்த அகமதாபாத் போலீசார், “ ஒரு தனியார் தொண்டு அமைப்புக்கு சாலைப் பாதுகாப்பு தொடர்பாக நோட்டீஸ் ஒட்ட மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது என்றும், அந்த அமைப்பு அனுமதியின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்களை ஒட்டியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட தொண்டு அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.