இந்தியா

'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் விபரீதம்.. காவலரை மோதிய ராகுல் காந்தியின் வாகனம்!

ராகுல் காந்தியின் பிரச்சார வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் விபரீதம்.. காவலரை மோதிய ராகுல் காந்தியின் வாகனம்!
Policeman injured by Rahul Gandhi's vehicle
பீகாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யின்போது, அவரது வாகனம் மோதியதில் ஒரு காவலர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நவடா பகுதியில் இன்று காலை நடைபெற்ற இந்த யாத்திரையில், ராகுல் காந்தி திறந்த ஜீப் ஒன்றில் நின்றபடி மக்களைச் சந்தித்து வந்தார். அப்போது, கூட்ட நெரிசலில் முன்னேறிச் சென்ற வாகனம், பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு காவலரின் காலில் ஏறியது.

உடனடியாக, சக காவலர்கள் மற்றும் ராகுல் காந்தியின் ஆதரவாளர்களும் இணைந்து வாகனத்தை பின்னோக்கித் தள்ளி, காவலரை விரைந்து மீட்டனர். வாகனத்தின் சக்கரங்களுக்கு அடியில் இருந்து மீட்கப்பட்ட அந்த காவலர் வலி தாங்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்தார். இதைப் பார்த்த ராகுல் காந்தி, உடனடியாக ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து, காயமடைந்த காவலருக்கு உதவுமாறு தனது ஆதரவாளர்களுக்குக் கொடுத்தார். பின்னர், அந்த காவலரை நேரில் சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார்.

பாஜகவின் குற்றச்சாட்டு

இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கிரஸை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, "ராகுல் காந்தியின் கார் போலீஸ் கான்ஸ்டபிளை மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். ஆனால், இந்த வாரிசு அரசியல்வாதி கீழே இறங்கி அவரைப் பார்க்கக்கூட இல்லை" என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

யாத்திரையின் பின்னணி

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சார உத்தியாக, ராகுல் காந்தி கடந்த 17 ஆம் தேதி சசாரம் நகரில் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யைத் தொடங்கினார். ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளனர்.

பீகாரில் "வாக்குகளைத் திருடும் சதி" நடப்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வரும் நிலையில், இந்த யாத்திரையை ஜனநாயகம் காப்பதற்கான ஒரு தார்மீகப் பயணமாக காங்கிரஸ் பார்க்கிறது. 16 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, 20 மாவட்டங்கள் மற்றும் 1,300 கி.மீ. தூரத்தைக் கடந்து செப்டம்பர் 1ஆம் தேதி பாட்னாவில் நிறைவடைகிறது. இந்த யாத்திரை, காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி தரும் என அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.