இந்தியா

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, பேன்ட்டுக்குள் தேளை வைத்த ஆசிரியர்கள்.. 3 பேர் மீது வழக்கு!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலினச் சிறுவனைத் தாக்கி, பேன்ட்டுக்குள் தேளை வைத்த ஆசிரியர்கள்.. 3 பேர் மீது வழக்கு!
Teachers Booked for Assaulting Scheduled Caste Student and Putting Scorpion in His Pants
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், எட்டு வயது பட்டியலினச் சிறுவனைத் தலைமை ஆசிரியர் உள்பட மூன்று ஆசிரியர்கள் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர் துன்புறுத்தல்

சிம்லாவின் கத்தபாணி அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகியோர் சுமார் ஒரு வருடமாகக் தன் மகனைத் தொடர்ந்து உடல் ரீதியாகத் தாக்கி, துன்புறுத்தி வந்ததாகக் கூறியுள்ளார்.

அதிர்ச்சிக்குரிய கொடூரங்கள்

சிறுவனைத் தொடர்ந்து அடித்ததில், அவனது காதில் இரத்தம் வந்து செவிப்பறை சேதமடைந்துள்ளது. மிகவும் மோசமான செயல் என்னவென்றால், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளியின் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, அவனது பேன்ட்டுக்குள் ஒரு தேளை வைத்துச் சித்திரவதை செய்துள்ளதாக மாணவனின் தந்தை வேதனை தெரிவித்துள்ளார்.

மிரட்டல் மற்றும் சாதியப் பாகுபாடு

இச்சம்பவம் குறித்து வெளியே சொன்னால் "உங்களை எரித்துவிடுவோம்" என்று குடும்பத்தினரை ஆசிரியர்கள் மிரட்டியதோடு, புகார் அளிக்கக் கூடாது என்றும் எச்சரித்துள்ளனர். மேலும், பள்ளியில் சாதி ரீதியான பாகுபாடு காட்டப்படுவதாகவும், உணவு நேரத்தில் பட்டியலின மாணவர்கள் மற்ற மாணவர்களிடம் இருந்து தனியாக அமர வைக்கப்பட்டதாகவும் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

காவல்துறையின் நடவடிக்கை

இந்தப் புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.