இந்தியா

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!
Son-in-law hacked his mother-in-law into 19 pieces
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரேயில், ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட உடல் பாகங்கள் பிளாஸ்டிக் பைகளில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், அந்தப் பெண்ணின் மருமகன் உட்பட மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சடலம் கண்டெடுப்பு

கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி, துமகூரு மாவட்டம், கொரட்டகெரே, கோலாலா கிராமத்தில் சாலையோரம், பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்திய தேடுதலில் மொத்தம் 14 பைகளைக் கைப்பற்றினர். அதில், துண்டிக்கப்பட்ட தலை உட்பட, ஒரு பெண்ணின் உடல் 19 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது.

அடையாளம் காணப்பட்ட உடல்

போலீசார் தலையின் உதவியுடன், கொல்லப்பட்டவர் 42 வயதான லட்சுமி தேவி என்று அடையாளம் கண்டனர். இந்த வழக்கை விசாரிக்க, துமகூரு போலீஸ் கண்காணிப்பாளர் அசோக் கே.வி., ஒரு சிறப்பு படையை அமைத்தார். விசாரணையில், லட்சுமி தேவியின் பல் மருத்துவரான மருமகன் ராமச்சந்திரப்பா எஸ்., அவரது நண்பர்கள் சதீஷ் கே.என். மற்றும் கிரண் கே.எஸ். ஆகியோர் இந்தக் கொலையைச் செய்திருப்பது தெரியவந்தது.

கொலைக்கான காரணம்

விசாரணையில், மருமகன் ராமச்சந்திரப்பா, லட்சுமி தேவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டிருந்ததாகவும், அது அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தியதால் இந்தக் கொடூரக் கொலையைச் செய்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

கொலை செய்தபின், ஆதாரங்களை அழிப்பதற்காக, சடலத்தை 19 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, பல இடங்களில் வீசியுள்ளனர். இந்த வழக்கில், ராமச்சந்திரப்பா உட்பட மூன்று பேரும் கைது செய்யப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாமியாரை மருமகனே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.