இந்தியா

புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இன்று பிற்பகல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
புதிய வக்ஃபு சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், திமுக, தவெக, ஆம் ஆத்மி உட்பட இதுவரை 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 20 கோடி இஸ்லாமியர்களின் உரிமை பறிக்கப்பட்டு உள்ளதாகவும், மத உரிமையில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார். இதனையடுத்து தவெக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 8 லட்சம் வக்ஃபு சொத்துகளை கையகப்படுத்தும் வகையில் வக்ஃபு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்தியா முழுவதும் சுமார் 1.20 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் வக்ஃபு வாரியங்களில் உள்ளன. அந்தச் சொத்துகள் இஸ்லாமிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இஸ்லாமியர்கள் அல்லாவின் பெயரால் தானமாக வழங்கிய சொத்துகள் ஆகும். அவற்றை நிர்வகிப்பதற்கு ’வக்ஃபு கவுன்சில்' மற்றும் 'வஃக்பு வாரியம்' ஆகிய அமைப்புகள் உள்ளன. இதுவரை இருந்த சட்டத்தின்படி அந்த அமைப்புகளை இஸ்லாமியர்களே நிர்வகித்து வந்தனர்.

இதனிடேயே, வக்ஃபு சட்டம் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மிகவும் கடுமையான அணுகு முறையை மேற்கொண்டு இருக்கிறது என மத்திய அரசு தரப்பினர் தெரிவித்தனர். வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க எங்களுக்கு ஒரு வார காலமாவது அவகாசம் கொடுங்கள் இந்த ஒரு வார காலத்திற்குள் எதுவும் மாறிவிடப் போவதில்லை என மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

வக்ஃபு மசோதா தொடர்பான இரண்டாம் நாள் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது. “வக்ஃபு சட்டத்தை நீங்கள் தடை செய்யப் போகிறீர்கள் என்றால் அது மிகவும் அரிதானதாகவே கருதப்படும். ஆனால், அதற்கு முன்பாக இந்த சட்டத்தின் நோக்கம், கடந்த கால வரலாறு உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ள வேண்டும். காரணம் கிராமம், கிராமமாக வக்ஃபு சொத்துக்கள் என மாற்றப்பட்டு வருகின்றது. மேலும், இது நாடாளுமன்றத்தால் நிறைவேற்றிக் கொண்டுவரப்பட்ட சட்டம் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்” என மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார்.

இஸ்லாமியர்களின் வக்ஃபு சொத்துகளை சரியாக நிர்வகிக்க ஆலோசனைகளை வழங்கும் குழுவில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் இருக்கும்போது இந்து மத சொத்துக்கள் தொடர்பான ஆலோசனைக் குழுவில் இந்துக்கள் அல்லாதவர் ஏன் இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வக்ஃபு சம்பந்தமான வழக்கில் நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, வக்ஃபு சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்து அறநிலையைத்துறையை இந்துக்கள் மட்டும் நிர்வகிக்க முடியும் என்ற சூழலில், இந்து கோயில் நிர்வாக ஆலோசனை குழுவில் வேறு மதத்தைச் சேர்ந்தவரை உறுப்பினராக்கலாமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் அனுமதிப்பீர்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இடைகால உத்தரவுகள் அனைத்தையும் நிறுத்தி வைத்து இன்று பிற்பகலுக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இன்று நடைபெறும் விசாரணைக்குப் பிறகு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதியளித்துள்ளது.