கேரளாவில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள பிரியங்கா காந்தி வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலி, வயநாடு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இந்த இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். இதனால் வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார் ராகுல். இதனையடுத்து இந்த தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணயம் அறிவித்தது. அதே வேகத்தில் வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளில் வேட்பாளர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இடதுசாரி கூட்டணி சார்பில் சத்யன் மொகேரியும், பாஜக கூட்டணியில் இருந்து நவ்யா ஹரிதாசும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்ய அக்.21ம் வயநாடு செல்கிறார் எனவும் அப்போது பிரியங்கா காந்தியுடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடன் செல்கிறார் எனவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வயநாட்டுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அக்டோபர் 21ம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 23) தனது சகோதரர் ராகுல் காந்தி, தாய் சோனியா காந்தி, கணவர் ராபர்ட் வத்ரா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன காகேவுடன் வந்து வயநாடு தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.
இதனையடுத்து வயநாட்டில் நடைபெற்ற பேரணியில் மக்களிடம் உரையாற்றினார் ராகுல் காந்தி. அப்போது அவர் தெரிவித்ததாவது, “இந்தியாவிலேயே வயநாட்டிற்கு தான் இரண்டு எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ஒருவர் அதிகாரப்பூர்வமான எம்.பி ( பிரியங்கா காந்தி), மற்றொருவர் அதிகாரப்பூர்வமில்லாத எம்.பி(ராகுல் காந்தி). இரண்டு எம்.பி.யும் வயநாட்டிற்காக உழைப்போம்” என தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க: சுப்மன் கில், ரிஷப் பண்ட் தயார்.. தோல்வியில் இருந்து மீளுமா இந்திய அணி?
2019, 2024 தேர்தல்களில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றிப் பெற்றிருந்தார். இதனால், தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பிரியங்கா வெற்றிப் பெற்றால், தற்போது நாடாளுமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு பிறகு காந்தி குடும்பத்தின் மூன்றாவது எம்.பி.யாக அவர் இடம்பெறுவார்.