இந்தியா

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.


கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் மாநில காவல்துறை விசாரித்து வந்தது. இது தொடர்பாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சிலரை கைது செய்ததோடு, அவர்களின் வீடுகளும் தகர்க்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு - காஷ்மீர் காவல்துறை வசமிருந்த இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஒரு ஐஜி, டிஐஜி மற்றும் எஸ்.பி. மேற்பார்வையில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. பஹல்காமில் நடந்த கொடூரமான தாக்குதலை நேரில் கண்ட சாட்சிகளை, முதற்கட்டமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணவும், விசாரணையை என்.ஐ.ஏ அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என உறுதி செய்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை இந்தியா கொடுத்த பதிலடியில் முக்கிய அம்சங்களாகும். இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் வெளியேற மத்திய அரசு கொடுத்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தவிற, மற்ற அனைவரும் இன்றே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதியுடன் விசா முடிவடைய உள்ளதால், அவர்களுக்கும் அன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.