இந்தியா

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை
ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, இந்திய பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இந்திய மக்களுடன் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று அவர் பேசியபோது காஷ்மீர் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுலா துறையில் மிகவும் வளர்ச்சியடைந்து வந்ததாகவும், ஆனால் பஹல்காம் தாக்குதல் மூலம் எதிரிகள் அந்த இடத்தின் வளர்ச்சியை தடுக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 121வது அத்தியாயத்தில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் கொதிப்படையச் செய்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரில் அமைதி திரும்புவது, நம் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை என்றும், காஷ்மீரை பயங்கரவாதிகள் மீண்டும் அழிக்கத் துடிப்பதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களின் விரக்தியாகத்தான் இந்த தீவிரவாத தாக்குதல் இருப்பதாக கூறிய அவர், காஷ்மீரை அழிக்க வேண்டும் என்ற மிகப்பெரிய சதி இதில் இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கடினமான நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என வலியுறுத்தியதுடன், உலக நாடுகளும் 1 புள்ளி 4 பில்லியன் இந்திய மக்களுக்கும் துணை நிற்கும் என உறுதியளித்தார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களும் தன்னை அழைத்து பஹல்காம் தாக்குதலுக்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளதாகவும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.