சினிமா

வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்- விஜய் ஆண்டனி உருக்கம்

பஹல்காம் தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.

வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்- விஜய் ஆண்டனி உருக்கம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என உறுதி செய்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தான் மக்களை வெளியேற்றுதல் ஆகியவை இந்தியா கொடுத்த பதிலடியில் முக்கிய அம்சங்களாகும். தொடர்ந்து, பாகிஸ்தான் மக்கள் வெளியேற மத்திய அரசு கொடுத்திருந்த காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தவிற, மற்ற அனைவரும் இன்றே நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி பதிவு

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொது மக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும், நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பை கடந்து மனிதத்தை வளர்ப்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.