அரசியல்

திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் இணையலாம்-விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு

திமுகவின் எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கை. அந்த கொள்கையில் நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம் என்று ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுகவை எதிர்ப்பவர்கள் அதிமுகவில் இணையலாம்-விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அண்ணா காலனி, பசும்பொன் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுகவில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டம் தான் ஒரிஜினாலிட்டி, விஜய் நடத்தியது பூத் கமிட்டி கூட்டம் கிடையாது அது ஒரு பொதுக்கூட்டம். விஜய் பூத் முகவர்கள் போர் வீரர்கள் என்றால் அதிமுக பூத் முகவர்கள் அனைவரும் பல களம் கண்ட போர்ப்படை தளபதிகள். வெல்லப்போவது யார் என்பதை மக்கள் முடிவு எடுத்து கொள்ள வேண்டும்

விஜய் ஒரு மிகச் சிறந்த நடிகர், செல்வாக்கு மிக்க நடிகர் என்பதால் அவரை பார்ப்பதற்கு எல்லோரும் வருவார்கள். சிவகாசிக்கு வந்தால் கூட நானும் ஓரமாக நின்று அவரை பார்ப்பேன். அவரது பேச்சை கேட்பேன். அதையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. கூட்டம் அனைத்தும் ஓட்டாக மாறாது. திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் நேரத்தில் நடிகர் வடிவேலுக்கு கூடிய கூட்டத்தை கண்டு நாங்களே அரண்டு போனோம். ஆனால் அந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றேன்.

நடிகருக்கு கூடும் கூட்டம் எல்லாம் எம்.ஜி.ஆருடன் முடிவடைந்தது. எம்.ஜி.ஆர் தனது 20 ஆண்டு அரசியலில் பல கருத்துக்களை திரைப்படம் வாயிலாக சொல்லி இளைஞர்களை பக்குவப்படுத்தி, இளைஞர்களை நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக மாற்றி அரசியல் அரங்கில் அவர்களை விளையாட வைத்து அதற்கு பின்னர் எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்ததால் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று வரும் இளைஞர்கள் படித்த பட்டதாரிகள். அனைவரும் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும், எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் வருகிறார்கள். இளைஞர்கள் தான் அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக உள்ளார்கள்.

திமுகவை எதிர்க்கும் எந்த கட்சியும் அதிமுகவில் கூட்டணியில் சேரலாம். திமுகவின் எதிர்ப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் கொள்கை. அந்த கொள்கையில் நடிகர் விஜய் உள்ளிட்ட யார் வேண்டுமானாலும் வரலாம்” என்று தெரிவித்தார்.

தவெக வருகை அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுகவிற்கு யாராலும் பாதிப்பு வராது. நாட்டு மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் தளமாக அதிமுக இருக்கும் என இளம் வாக்காளர்களும் கருதுவதால் அதிமுகவின் பக்கமே இளைஞர்கள் கூட்டம் அதிகமாக வரும் . அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது மற்றவர்களை பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்தார்.