இந்தியா

சைவ பிரியாணிக்குப் பதிலாக அசைவ பிரியாணி: உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை!

சைவ பிரியாணிக்கு பதிலாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சண்டையில், உணவகத்தின் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சைவ பிரியாணிக்குப் பதிலாக அசைவ பிரியாணி: உணவக உரிமையாளர் சுட்டுக்கொலை!
Restaurant owner shot dead
சைவ பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு தவறுதலாக அசைவ பிரியாணி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட சண்டையில், ராஞ்சியில் உள்ள உணவகத்தின் உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள காங்கே-பித்தோரியா சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த 18 ஆம் தேதி இரவு ஒரு வாடிக்கையாளர் சைவ பிரியாணியை பார்சலாக வாங்கியுள்ளார். பார்சலை எடுத்துச் சென்ற அவர், சிறிது நேரத்திற்குப் பிறகு மேலும் சிலருடன் உணவகத்துக்கு திரும்பி வந்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டது சைவ பிரியாணி இல்லை, அசைவ பிரியாணி என்று கூறி, ஆத்திரமடைந்து உரிமையாளருடன் சண்டையிட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்ட உரிமையாளர்

உணவகத்தின் உரிமையாளர் விஜய் குமார் நாக் (47) என்பவருக்கும் அந்த கும்பலுக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், தீடிரென ஒருவர் உரிமையாளர் விஜயை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். குண்டு அவரது மார்பில் பாய்ந்ததால், அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, விஜய் குமார் நாக்கின் உடல், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

பொதுமக்கள் சாலை மறியல்

இந்தக் கொலையைக் கண்டித்து, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று (அக்.19) காலை காங்கே-பித்தோரியா சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.

குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது, குற்றவாளிகளைத் தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், இந்தக் கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் நோக்கம் இருக்கிறதா என்றும் காங்கே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.