அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது என மக்களவையில் பிரதமர் மோடி உருக்கமாக பேசினார்.
அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவையொட்டி மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, “அரசியல் சாசனத்தின் 75வது ஆண்டு பயணம் என்ற திருவிழாவை கொண்டாடி வருகிறோம்.75 ஆண்டு கால பயணம் என்பது சாதாரண ஒரு நிகழ்வு அல்ல, அரிதான நிகழ்வு. இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கு மிகப்பெரிய தொலைநோக்கு சிந்தனை இருந்தது. அதனை அடிப்படையாக கொண்டு நாம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்.
ஜனநாயகத்தின் தாய் என்று இந்தியா அழைக்கப்படுகிறது, அரசியல் சாசனத்தையும், ஜன நாயகத்தையும் கொண்டாட வேண்டிய நேரம் இது. அரசியல் சாசனத்தை வடிவமைத்ததில் பெண்கள் மிக முக்கிய பங்காற்றி உள்ளனர். வெவ்வேறு பின்னணி கொண்ட 15 பெண்கள் அரசியல் நிர்ணய சபையில் இருந்தனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் விடுதலைக்கு பின் பெண்களுக்கு வாக்குரிமை தர பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டனர். ஆனால் இந்தியாவில் தான் சுதந்திரம் பெற்ற உடனேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. இன்று மத்திய அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களின் மையமாக பெண்கள் உள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டின் குடியரசுத் தலைவரே பழங்குடியின வகுப்பை சேர்ந்த ஒரு பெண் தான் என பெருமை தெரிவித்தார்.
நமது நாடு விரைவில் உலகின் 3வது மிகப்பெரிய சக்தி கொண்ட நாடாக உருவெடுக்கும். நாட்டை ஒற்றுமையாக வைத்திருப்பதில், நமது அரசியல் சாசனம் தான் ஆதாரமாக உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாகவே இருக்கிறது.
இந்தியா, ஒரே நாடு என்பதை வலியுறுத்த தான் 370 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டது. ஏழைகள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது, உணவு தானியம் கிடைப்பதற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் உள்ளது. நாட்டின் பொருளாதார ஒற்றுமைக்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு ஒரே வரி என்பது நமது பொருளாதாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது.
ஏழைகள் இலவச சிகிச்சை பெறுவதற்காக, ஒரே நாடு ஒரே சுகாதார என்ற திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் கொண்டு வரப்பட்டது. ஒரே நாடு ஒரே மின் வழித்தட திட்டத்தால் நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது.
ஏழைகள் மற்றொரு மாநிலத்திற்கு செல்லும் போது, உணவு தானியம் கிடைப்பதற்காக ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டது. மாற்று மொழிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டது. புதிய தேசிய கல்வி கொள்கையால் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரே நாடு ஒற்றுமையை வலியுறுத்த காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வந்து அரசியல் சாசனத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது என காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பின் 25வது ஆண்டின்போது காங்கிரஸ் ஆட்சியில் தான் அந்த எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. ஜனநாயகத்தை நெறித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எல்லா இடத்திற்கும் கொண்டு செல்வதற்காகவே ஜன நாயகத்தை டிஜிட்டல் மயமாக்கினோம். எமர்ஜென்சியின் போது ஊடக சுதந்திரமும் நசுக்கப்பட்டது.
நவ. 26 இந்திய அரசியல் சாசன தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தபோது ஒரு காங். தலைவர் என்ன அவசியம் என கேட்டார். அரசியல் சட்டம் இல்லை என்றால் என்னை போன்றவர்கள் எல்லாம் இந்த அவைக்கு வந்திருக்க முடியாது.
எங்களை தொடர்ந்து 3 முறை மக்கள் தேர்வு அனுப்பி வைத்துள்ளனர். நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மட்டுமே 50 ஆண்டுகளாக ஆட்சி செய்தனர்.
ஒரே ஒரு காங்கிரஸ் குடும்பம் தான் இந்திய அரசியல் சாசனத்தை அதிகமாக காயப்படுத்தியது. 1947 முதல் 1952 வரை நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை. அரசியல் சாசனத்தை அவமதிப்பதற்கான எந்த வாய்ப்புகளையும் காங்கிரஸ் விட்டு வைக்கவில்லை. அரசியல் சாசனத்தை மாற்றுவதற்கு, அவசர சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது என்றார்.
மேலும், 1976ல் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய போது அந்த தீர்ப்பை மாற்றியவர் இந்திரா காந்தி. காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.
இதனால் ஆவேசமாக காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் உரைக்கு, எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். எமர்ஜென்சி காலத்தில் மக்களின் உரிமைகளை பறித்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. நீதிமன்றம் இந்திரா காந்தியின் எம்பி பதவியை பறித்ததால், கோபத்தில் நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்தார் என சாடினார். மேலும், தன்னுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே இந்திரா காந்தி எமர்ஜென்சியை கொண்டு வந்தார் என்றும் பேசினார். இதனால் மக்களவையில் சற்று நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.