இந்தியா

வெளியான ஊழல் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன? அதிகரிக்கும் ஊழல்..சரியும் புள்ளிகள்!

180 நாடுகளில் ஆய்வு செய்து அதில் அதிகம் ஊழல் செய்யும் நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. இந்த ஊழல் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் இடம்பெற்றுள்ளது? முன்பை விட இந்தியா முன்னேற்றம் அடைந்திருக்கிறதா? விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வெளியான ஊழல் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன? அதிகரிக்கும் ஊழல்..சரியும் புள்ளிகள்!
வெளியான ஊழல் பட்டியல்.. இந்தியாவின் நிலை என்ன? அதிகரிக்கும் ஊழல்..சரியும் புள்ளிகள்!

லஞ்சம்..லஞ்சம்..லஞ்சம்.. என இந்தியன் படத்தில் கமல்ஹாசன் பேசியதை போல, இந்தியாவில் ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கின்றது.

இந்நிலையில்,  2024ம் ஆண்டுக்கான ஊழல் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. 180 நாடுகளை வைத்து உருவாக்கப்பட்ட இந்த பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் மிகவும் குறைவான ஊழல் நடைபெறும் நாடுகளாக டென்மார்க், பின்லாந்து, சிங்கப்பூர், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்த பட்டியலில் டென்மார்க் தொடர்ந்து முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அந்நாட்டில் உள்ள சட்டங்களே காரணம் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

இந்த பட்டியலில் கடைசி இடங்களை பிடித்திருக்கும் சோமாலியா, சவுத் சூடான், சிரியாவில் ஊழல் மலிந்து விட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தாண்டி, அண்டை நாடுகளான பாகிஸ்தான் 135வது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும், வங்கதேசம் 149வது இடத்திலும் உள்ளது.

இப்படி 180 நாடுகளை வைத்து உருவான இந்த பட்டியலில் 96வது இடத்தை பெற்றுள்ளது இந்தியா. அதாவது ’ஊழல் அற்ற நாடு’ என்ற பரீட்சையில் இந்தியா 100க்கு வெறும் 38 மதிப்பெண்களை மட்டுமே வாங்கியுள்ளதாம். 2023ம் ஆண்டில் இதே பட்டியலில் 39 மதிப்பெண்களையும், 2022ம் ஆண்டில் 40 மதிப்பெண்களையும் பெற்றிருந்தது இந்தியா. பட்டியலின் வரிசை படி பார்த்தால், தற்போது 96வது இடத்தில் இருக்கும் இந்தியா 2023ம் ஆண்டில் 93வது இடத்தில் இருந்துள்ளது. ஆனால் தற்போது ஒரே ஆண்டில் 3 புள்ளிகள் வரை சரிந்துள்ளது இந்தியா.

மேலும், கடந்த 2011ம் ஆண்டில் 178 நாடுகளுளை வைத்து எடுக்கப்பட்ட  ட்ரான்சிபரன்சி இன்டர்நேஷனலின் இந்த ஊழல் பட்டியலில்  இந்தியா 95வது இடத்தில்  இருந்தது.

இந்நிலையில், கடந்த 14 ஆண்டுகளாக பட்டியலில் இந்தியா எந்த ஒரு பெரிய சமூக மாற்றத்தையும் பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய வகையில் அமைந்துள்ளது.