அரசியல்

தவெக பொதுக்குழுவுக்கு சிக்கல்...? மண்டை காயும் ஆனந்த்? எரிச்சலில் தவெக தொண்டர்கள்?

தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு பிப்ரவரி 26ம் தேதி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், அதற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அந்த சிக்கல் என்ன? தவெகவினர் எரிச்சலில் இருப்பது ஏன்? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....

தவெக பொதுக்குழுவுக்கு சிக்கல்...? மண்டை காயும் ஆனந்த்? எரிச்சலில் தவெக தொண்டர்கள்?
தவெக பொதுக்குழுவுக்கு சிக்கல்...? மண்டை காயும் ஆனந்த்? எரிச்சலில் தவெக தொண்டர்கள்?

வெற்றிக்கரமாக வெற்றிக் கழக மாநாட்டை நடத்தி முடித்த கையோடு, சட்டமன்றத் தேர்தல் வெற்றியை நோக்கி அடுத்தடுத்த காய்களை நகர்த்தி அரசியல் கட்சிகளை திணறடித்து வருகிறார் தவெக தலைவர் விஜய். தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம், மாவட்ட நிர்வாகிகள், அணிகள், என அடுத்தடுத்து தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ள விஜய், கட்சியின் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டு வருகிறார்.

பிப்ரவரி 2, 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் விஜய் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுவிட்டது. தேர்தல் ஆணைய விதிகளின்படி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சி ஆண்டுத்தோறும் பொதுக்குழுவை கூட்டம வேண்டும். விஜய் கட்சித் தொடங்கி ஓராண்டை நிறைவு செய்திருந்தாலும், இன்னும் பொதுக்குழுவை கூட்டவில்லையே ஏன்? என்ற கேள்விகள் பனையூரை நோக்கி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில், தான் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், தேர்தல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி, தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் ஆர்ஜூனா ஆகியோரிடம் விஜய் ஒப்படைத்துள்ளதாகக் கூறப்பட்டது.

தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தை பிப்ரவரி 26ம் தேதி YMCA மைதானத்தில் நடத்த அனுமதி கேட்கப்பட்டதாகவும், அந்த தேதியில் அங்கு வேறொரு நிகழ்ச்சி நடக்க இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதனால், வேறு இடத்தை முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட தவெக, ஏற்கனவே மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்த ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள Confluence Convention செண்டரிலேயே பொதுகூட்டத்தை நடத்தலாம் என்ற முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியானது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் ஆர்ஜூனா ஆகிய மூவரும் Confluence Convention செண்டருக்கு சென்று பொதுக்குழுவில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த இடம் சரிவருமா என ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிலையில், ஏற்கனவே தவெகவின் முதல் மாநாட்டில் நடந்ததை போல, Confluence Convention செண்டரில் தவெக பொதுக்குழுவை நடத்த அனுமதி கிடைக்காமல் இழுபறியில் செல்வதாக கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், தவெக பொதுக்குழுவில் எந்த இடம் தேர்வாகுமோ என்ற விரக்தியில் பனையூர் வட்டாரம் இருப்பதாக கூறப்படுகிறது. தவெகவின் பொதுக்குழு நடக்கும் இடம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..