இந்தியா

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்.. அத்தை மகனை கொலை செய்த இளைஞர்!

மூன்று வயது சிறுவனை கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் உடல்.. அத்தை மகனை கொலை செய்த இளைஞர்!
Boy's body found on train (AI Generated image)
தனது அத்தையின் மூன்று வயது மகனைக் கொலை செய்து, ரயிலின் கழிவறையில் உடலை வீசிய வழக்கில், விகாஸ்குமார் ஷா என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலை தேட சொல்லி அத்தை தொடர் தொந்தரவு செய்தது காரணமாகவே இந்த கொடூரக் கொலையைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவத்தின் பிண்ணனி

பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்த 30 வயதான விகாஸ்குமார் ஷா, கடந்த ஏப்ரல் 2025 வரை சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து, இந்தியாவுக்கு திரும்பிய அவருக்கு வேலை இல்லாததால், சுமார் 15 நாட்களுக்கு முன்பு வேலை தேடித் தனது தாயாருடன் சூரத்திற்கு வந்து அத்தையின் வீட்டில் தங்கியுள்ளார்.

ஆனால், அவர் வேலை தேடாமல் இருந்ததால், அவரது அத்தை தொடர்ந்து அவரை வேலை தேடச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விகாஷ்குமார், கடந்த 21 ஆம் தேதி, தனது அத்தையின் மூன்று வயது மகனைக் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து, சூரத் நகரின் கணேஷ்புரா பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், அம்ரோலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், விகாஸ்குமார் ஷா சிறுவனுடன் மும்பை செல்லும் ரயிலில் ஏறியது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

கொலை மற்றும் கைது

இந்த நிலையில், கடந்த 23 ஆம் தேதி அதிகாலையில், கோரக்பூரில் இருந்து மும்பை லோகமான்ய திலக் டெர்மினஸ் (LTT) வரை செல்லும் குஷிநகர் விரைவு ரயிலின் கழிவறையில் இருந்த குப்பைத் தொட்டியில் ஒரு சிறுவனின் உடலை தூய்மை பணியாரகளை கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் விசாரணையில் விகாஸ்குமார் ஷா கடத்தி சென்ற குழந்தை என்பது அடையாளம் காணப்பட்ட பின்னர், அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும், அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து, அவர் மும்பையின் பாந்த்ரா, குர்லா மற்றும் தாதர் பகுதிகளில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார், கடந்த 25 ஆம் தேதி மாலை, பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் வைத்து விகாஸ்குமார் ஷாவைக் கைது செய்தனர்.

விசாரணையில், வேலை தேட சொல்லி அத்தை தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் கோபமடைந்த விகாஸ்குமார் ஷா, சிறுவனைக் கடத்தி, கூர்மையான ஆயுதத்தால் கொடூரமாகக் கொலை செய்து, பின்னர் உடலை ரயிலில் வீசியதாக ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.