இந்தியா

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை உடுத்திய பாஜகவினர்

பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததால் காங்.நிர்வாகி மீது பாஜகவினர் கோபம்

 மகாராஷ்டிராவில் காங்கிரஸ் நிர்வாகிக்கு சேலை உடுத்திய பாஜகவினர்
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தொண்டருக்கு சேலை உடுத்திய பாஜகவினர்
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் நகரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் "மாமா" பகாரே என்ற 73 வயதான நிர்வாகி, பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை மாற்றியமைத்து, சேலை அணிந்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.

காங்.நிர்வாகிக்கு சேலை

இந்த செயல் பாஜக தொண்டர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, உள்ளூர் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், பிரகாஷ் பகாரேவை ஒரு இடத்தில் வழிமறித்து, அவரை வலுக்கட்டாயமாக சேலை உடுத்தச் செய்து, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

இந்த வீடியோவில், பிரகாஷ் பகாரே "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்பதும், பாஜக தொண்டர்கள் அவரை வலுக்கட்டாயமாக சேலை உடுத்தச் செய்வதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, பகாரே, தன்னை இப்படி அவமானப்படுத்திய பாஜகவினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து அவதூறு

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்றும், பகாரே தவறு செய்திருந்தால், அவர்கள் போலீசில் புகார் அளித்திருக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம், பாஜகவினர், பிரதமரை அவமானப்படுத்தியவர்களுக்கு இது ஒரு பாடம் என்று கூறியுள்ளனர். மேலும், எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால், இதேபோன்ற எதிர்வினை இருக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

போலீஸ் தகவல்

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும், புகார் அளிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.