ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர். டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி டெல்லி அணியில் முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி திணறியபோது, கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 53 பந்துகளில் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தார். இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 17.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி இதுவரை நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
அதிரடி காட்டிய கே.எல்.ராகுல்
சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெல்லி அணியின் வெற்றிக்கு கே.எல்.ராகுல் முக்கிய காரணமாக அமைந்தார். அதிரடியாக விளையாடிய கே.எல். ராகுல் 53 பந்துகளில் 6 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக திகழும் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக ஆடக்கூடியவர். ஆனால், நேற்றைய போட்டியில் 4-வது வீரராக களமிறங்கி அதிரடி காட்டினார். ஆட்டத்தின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர், வின்னிங் ஷாட் அடித்த பிறகு செய்த செலிபிரேஷன் செய்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.