'திமுகவில் கலவரம் வெடிக்கும் என்று ரஜினியே கூறி விட்டார்'.. கொளுத்திப்போட்ட அண்ணாமலை!

''துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது'' நடிகர் ரஜினிகாந்த் நேற்று பேசி இருந்தார்.

Aug 25, 2024 - 20:56
Aug 26, 2024 - 09:50
 0
'திமுகவில் கலவரம் வெடிக்கும் என்று ரஜினியே கூறி விட்டார்'.. கொளுத்திப்போட்ட அண்ணாமலை!
MK Stalin And Rajinikanth And Annamalai

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்'  நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த், ''''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். 

துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு. அவர் என்ன சொல்ல வருகிறார். ஒரு விஷயத்தில் பாராட்டுகிறாரா? இல்லை திட்டுகிறாரா? என்பது தெரியாது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You.'' என்று கூறியிருந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்பட விழாவில் பங்கேற்க அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த அமைச்சர் துரைமுருகன் அதிருப்தியில் உள்ளதாகவும், இதை வைத்தே ரஜினி மறைமுகமாக பேசியதாகவும் தகவல்கள் பரவின. இந்நிலையில், திமுகவில் மோதல் வெடிக்கும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் ரஜினி மறைமுக கூறியுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''நேற்று நடந்த திமுக விழாவில் துரைமுருகன், எ.வ.வேலு போன்றவர்கள் மேடையில் இருக்கும்போது, அரியணை உதயநிதி ஸ்டாலின் கையில் செல்லும்போது திமுகவில் கலவரம் வெடிக்கும் என்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதைத்தான் ரஜினிகாந்த் அவருடைய பாணியில், யாருக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என 'பழைய மாணவன்' 'புதிய மாணவன்' என்று முதல்வர் ஸ்டாலினிடம் மறைமுமாக எடுத்துச் சொல்லியுள்ளார். ஆனால் எப்போது உதயநிதி துணை முதல்வராக வருவார் என்று அமைச்சர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது தானே அவர்கள் கூடுதலாக சொத்து சேர்க்க முடியும்'' என்று கூறியுள்ளார். 

முன்னதாக பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் நேற்று திமுக மேடையில் ரஜினி பேசியதை குறிப்பிட்டார். ''நேற்று திமுக விழாவில் பங்கேற்ற 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலின் பழைய மாணவர்களை நிர்வகித்து கொண்டிருக்கிறார் என்று மூத்த அமைச்சர்களை சுட்டிக்காட்டினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் பழைய மாணவர்களை நிர்வகிக்கிறார் என்றால் பரவாயில்லை, தம்பி உதயநிதியும் நிர்வாகிக்கிறாரே என அண்ணன் துரைமுருகன் வேதனைப்படுவார்'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow