அரசியல்

PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

PM SHRI திட்டத்தை தமிழக அரசு ஒப்புக்கொண்டதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்த கருத்துக்கு நாடாளுமன்றத்திலுள்ள திமுக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். 

PM SHRI.. யூ-டர்ன் அடித்தார் உங்கள் சூப்பர் முதல்வர்: MP பேச்சால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி
Discussion about PM shri scheme on parliment

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்தனர் திமுக எம்.பி.க்கள். ஒன்றிய அரசின் கொள்கையை ஏற்கவில்லை என்பதற்காக நிதி விடுவிக்காதது பழிவாங்கும் செயல் என எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் திமுக-வினை சராமரியாக தாக்கி பேசினார். அவர் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு. “தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்குவது தொடர்பான பேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாராகவே உள்ளது. PM SHRI திட்டத்தை ஏற்றுக் கொள்வதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் யூ-டர்ன் அடித்தனர் தமிழக அரசு. PM SHRI திட்டம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழியும் என்னை வந்து சந்தித்தார், நடந்தது என்ன என்பது எம்.பி கனிமொழிக்கு தெரியும். அவர்கள் (திமுக) நேர்மையற்றவர்கள். அவர்கள் (திமுக) தமிழ்நாட்டு மாணவர்களிடம் உண்மையாக இல்லை. அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழித் தடைகளை உருவாக்குவது மட்டுமே அவர்களின் வேலை. அவர்கள் அரசியல் செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயக விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள். சூப்பர் முதல்வரின் ஆலோசனையால் PM SHRI திட்டத்தில் கையெழுத்திட மறுத்தனர். பாஜக ஆளாத மாநிலங்களிலும், குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது” என மத்திய கல்வி அமைச்சர் பதில் தர, அமைச்சரின் பதிலை ஏற்காமல் அவையின் மையப்பகுதியில் சூழ்ந்து தமிழக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்: எம்.பி கனிமொழி

”மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக திமுக எம்.பிக்கள் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு நிச்சயம் ஏற்காது. தமிழக எம்.பிக்களையும், மக்களையும் நாகரீகமற்றவர்கள் என மத்திய அமைச்சர் பிரதான் கூறியது மனதளவில் எங்களை புண்படுத்தியுள்ளது. அமைச்சரின் பேச்சு வருத்தமளிக்கிறது”, என கனிமொழி எம்.பி தெரிவித்தார். இதன்பின் பேசிய தர்மேந்திர பிரதான், ”நாகரீகமற்றவர்கள் என கூறிய கருத்து புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் நான் கூறிய  கருத்துகளை திரும்ப பெறுகிறேன்” என தெரிவித்தார். இதனால் அவை தொடங்கி சிறிது மணி நேரங்களிலேயே சலசலப்பு ஏற்பட்டது.

நிதி வேண்டுமானால் திட்டத்தில் இணையுங்கள்

தேசிய கல்வி கொள்கையின் கீழ் 'பிஎம் ஸ்ரீ' பள்ளி என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இணைய மறுத்து விட்டன. இதனால் மேற்கண்ட மாநிலங்களுக்கு (‘சமக்ரா சிக் ஷா’ ) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் நிதியை மத்திய அரசு அதிரடியாக நிறுத்தியது. தமிழ்நாட்டுக்கும் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் மத்திய அரசு தரவேண்டிய நிலுவைத் தொகையை இதுவரை வழங்கப்படவில்லை. 'பிஎம் ஸ்ரீ' திட்டத்தில் சேர்ந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.

இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: மகிளா சம்ரிதி யோஜனா: பெண்களுக்கு மாதம் ரூ.2500- வெளியானது சூப்பர் அப்டேட்!