தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 80 வயதானாலும் இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இளையராஜா உலா வருகிறார். இவர் 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கி முடித்துள்ளார். இதற்கு ‘வேலியண்ட்’ (Valiant) என்று பெயரிட்டுள்ளார்.
இந்த சிம்பொனியை மார்ச் 8-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜா அரங்கேற்றினார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை படைத்த இளையராஜாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், லண்டனில் இருந்து விமானம் மூலம் தாயகம் திரும்பிய இளையராஜா, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “உங்களின் ஆதரவு, வரவேற்புடன் சேர்த்து எனது வெற்றிக்கு இறைவன் அருள்புரிந்தான். முறையாக ஒத்திகை பார்த்து பின்னர் சிம்பொனி இசையை அரங்கேற்றினேன். ஒரு சிம்பொனி வாசித்து முடியும் வரை யாரும் கைதட்டமாட்டார்கள்.
அது விதிமுறை. ஆனால், ஒவ்வொரு தருணத்திலும் ரசிகர்கள் கைத்தட்டியதால் இசை கோப்பாளர்களே ஆச்சரியமடைந்தனர். இவ்வாறு நம் ரசிகர்கள் ரசிப்பதை அந்த இடத்தில் தெரிவிக்கிறார்கள். அரசு மரியாதையுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. சிம்பொனியின் இரண்டாவது பிரிவில் எனது பாடல்களையும் வாசித்து, அதில் நானும் பாடினேன். எனது சிம்பொனி இசை, துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் நடக்கவுள்ளது.
ரசிகர்கள் என்னை இசைக் கடவுள் என்று அழைக்கிறார்கள் . நான் சாதாரண மனிதன்தான். 82 வயது ஆகிவிட்டதே என்று நினைக்க வேண்டாம். இனிதான் ஆரம்பிக்க போகிறேன். இந்த இசையை நீங்கள் பதிவிறக்கம் செய்து கேட்கக் கூடாது. இதனை மக்கள் நேரடியாக கேட்க வேண்டும் அந்த அனுபவம் வேறு” என்று கூறினார்.