பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள்.. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! ரஜினி நெகிழ்ச்சி
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. 1976-ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் 45 ஆண்டுகளாக தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். 80-ஸ், 90-ஸ் கிட்ஸுகளாக இருந்தாலும் சரி 2கே (2K) கிட்ஸுகளாக இருந்தாலும் சரி அனைவரும் சோகம் என்றாலே இளையராஜா இசையில் மூழ்கி விட ஆரம்பித்துவிடுவார்கள்.
இளையராஜாவுடன் ஒரு படத்திலாவது இணைந்துவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் பல இயக்குநர்கள் வலம் வருகின்றனர். 80 வயதானாலும் இசைத்துறையில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இளையராஜா உலா வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, சிம்பொனி உட்பட பல புதிய முயற்சிகளையும் விட்டு வைக்கவில்லை.
மேலும் படிக்க: ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனை.. இசைமூச்சான இளையராஜா- ஸ்டாலின் வாழ்த்து
அதாவது, இசையமைப்பாளர் இளையராஜா தற்போது 35 நாட்களில் ஒரு முழு சிம்பொனியை உருவாக்கி முடித்துள்ளார். இதற்கு ‘வேலியண்ட்’ (Valiant) என்று பெயரிட்டுள்ளார். இந்த சிம்பொனியை இன்று (மார்ச் 8) இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இளையராஜா அரங்கேற்ற உள்ளார். இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையை செய்ய உள்ள இளையராஜாவிற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது. சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு நேரில் சென்று அங்கு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டிருந்தார்.
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள். #IncredibleIlaiyaraaja @ilaiyaraaja @Onemercuri @LiveNationUK — Rajinikanth (@rajinikanth) March 8, 2025
What's Your Reaction?






