TN Cabinet Meeting : தமிழ்நாட்டில் 2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய உள்ளது. அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்ய முடியும். அதனால், இதுவே திமுகவின் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை கைப்பற்றிய திமுக பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக அமைச்சர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
மேலும் படிக்க: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக சந்திரகுமார் பதவியேற்பு
தொடர்ந்து, இந்த ஆண்டு தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் வாக்காளர்களை கவரும் விதமாக புதிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசு ஆட்சி பொறுபேற்று தற்போது வரை மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 2025-2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (பிப். 10) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர். 2025-26-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதிகள் மற்றும் பட்ஜெட்டில் இடம்பெற கூடிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.