இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை 5.36 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கட்டிடங்கள் குலுங்குவதை உணர்ந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். நில நடுக்கம் காரணமாக பாதிப்புகளோ, சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் கட்டடங்கள், மின்விளக்குகள், வீடுகள் குலுங்கும் காட்சி பதிவாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. டெல்லியில் வரும் நாட்களில் பெரிய அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்நிலையில், டெல்லி நிலநடுக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொள்கிறேன். நிலைமையை அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
முன்னதாக டெல்லி முன்னாள் முதல்வர் அதிஷி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "அனைவரும் பாதுகாப்பாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஏதேனும் பாதிப்புகள் அல்லது அவசர உதவிக்கு டெல்லி போலீசார் தரப்பில் 112 என்ற எண்ணில் அழைக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Tremors were felt in Delhi and nearby areas. Urging everyone to stay calm and follow safety precautions, staying alert for possible aftershocks. Authorities are keeping a close watch on the situation.
— Narendra Modi (@narendramodi) February 17, 2025