தமிழ்நாடு

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும் ? வானிலை மையம் அலர்ட் !

வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கும் ? வானிலை மையம் அலர்ட் !
Tamil Nadu Weather Update
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல அமைப்புகள் காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் :

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மற்றும் அதனுடன் கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய வங்கக்கடல் முதல் தெற்கு ஆந்திரப் பிரதேசம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை கடல் மட்டத்திலிருந்து 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.

மேலும், தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சுமார் 0.9 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்று (செப்டம்பர் 21) கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 22-ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்பு :

இன்று (21-09-2026) நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இந்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்பநிலையில் மாற்றம் இருக்காது :

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை முன்னறிவிப்பு :

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

இன்று (21-09-2026) தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, கடலுக்கு செல்லும் மீனவர்கள் வானிலை எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு பாதுகாப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.