தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகளைத் தரம் உயர்த்துவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.400 கோடி வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து, அவரை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையே, அன்பில் மகேஷை ஐந்து நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூன்று நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தது. அதன்படி, நவம்பர் 2-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அன்பில் மகேஷை காவலில் எடுத்த போலீஸார், அவரிடம் மூன்று நாள்கள் விசாரணை நடத்தினர்.
மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!
போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் இன்று சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிமன்ற உத்தரவின்படி அவரது உடல்நிலை குறித்த மருத்துவப் பரிசோதனை அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து, போலீஸார் விசாரணையின்போது துன்புறுத்தினார்களா, முறையாக உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டனவா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, தன்னை போலீஸார் துன்புறுத்தவில்லை என்றும், முறையாக உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டதாகவும் அன்பில் மகேஷ் பதிலளித்தார்.
நாளை ஜாமீன் மனு விசாரணை!
இதற்கிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான காவல்துறையின் பதில் மனுவை முன்கூட்டியே வழங்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அவ்வாறு வழங்கினால் மட்டுமே நாளை நடைபெறவுள்ள விசாரணையில் தங்களால் உரிய முறையில் வாதிட முடியும் என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை தனது பதில் மனுவை நாளை காலை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். தொடர்ந்து, அன்பில் மகேஷை நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனால், மூன்று நாள்கள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார் அன்பில் மகேஷ். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளதால், இந்த வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
LIVE 24 X 7









