தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 5) தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதேபோல், லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் சுமார் 3.1 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் சூழல் நிலவுகிறது.
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இன்று (05-11-2026) தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் இதர தென் தமிழ்நாட்டின் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், வெப்பநிலை சற்றுக் குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை ஒட்டியே காணப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய வானிலை எப்படி?
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று (நவம்பர் 5) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









