அரசியல்

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசப்பட்டத்தாக திமுக எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி ட்விஸ்டுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஆட்சி கவிழ்க சதி: அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்.. தலைமறைவான செ.பா தம்பி?
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை எம்.எல்.ஏ. என். இளையராஜாவிடம் கட்சி மாறுமாறு வலியுறுத்தி ரூ.35 கோடி ரூபாய்க்கு பேரம் பேசப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.இவ்வழக்கில் முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு திருச்சியை சேர்ந்த நரேஷ், மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டுள்ளனர்.இவ்வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் நீதிமன்றம் இம்மூவரையும் ஜுலை 15 தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கை பொறுத்தவரை, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார், கைது செய்யப்பட்ட நரேஷை சென்னையில் சந்தித்ததும் குறிப்பாக அந்த 2 பேரின் தூண்டுதலின் பேரிலேயே திருநாவுக்கரசு எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேரம் பேசிய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சென்னை கொண்டூ வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நெருக்கமானவர்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று (ஜூலை 02) இந்த வழக்கில் தொடர்புடைய பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன், மனப்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், குரோம்பேட்டையைச் அஸ்தினாபுரத்தை சேர்ந்த ராஜேஷ், நாமக்கலை சேர்ந்த அசோக் குமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் பேரம் பேசுவதற்கு உறுதுணையாக செயல்பட்டு வந்ததாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள அஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு மாத இதழ் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பத்திரிகையாளர் அஸ்தினாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், இவர்தான் எம்எல்ஏ இளையராஜாவை இருமுறை நேரடியாக தொடர்பு கொண்டு IPDS திருநாவுக்கரசுக்காக பேசியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல, கைதான சீனிவாசன் நாடார் பாதுகாப்பு பேரவையின் மாநில தலைவர் என்றும் அதிமுக பிரமுகர் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் கைதான சீனிவாசன் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளி என்பது போலீஸ் விசாரணையில் தகவல்.
தவெக எம்எல்ஏ இளையராஜாவை மிரட்டியதாக கூறப்படும் IPDS திருநாவுக்கரசுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார் சீனிவாசன். தமிழ்நாடு நாடார் பேரவை தலைவராக உள்ள சீனிவாசன் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே கரூரில் கைது செய்யப்பட்ட அதிபன் ரமேஷ் மனைவி காவல்துறை உயர் அதிகாரியிடம் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எதற்காக தனது கணவரை கைது செய்தீர்கள்? தங்களிடம் கைது செய்தது குறித்து ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை. எதற்காக கரூரிலிருந்து சென்னை அழைத்து வந்தீர்கள்? காரணம் முறையாக தெரிவியுங்கள். முதலில் எனது கணவரை என் கண் முன் காட்டுங்கள் என காவல்துறை உயரதிகாரிடம் கண்ணீர் மல்க அதிபன் ரமேஷ் மனைவி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வழக்கு மிகவும் சென்சிடிவ் ஆனது எதுவும் சொல்ல இயலாது. உங்களது கணவரை இன்னும் சற்று நேரத்தில் உங்கள் கண் முன் காமிக்கிறேன் என அதிகாரி கூறிவிட்டு சென்றார். இதன் பிறகு கைதான 6 பேரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றுள்ளனர். சோதனைக்கு பிறகு அனைவரையும் போலீசார் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமாரை போலீசார் தேடி வருவதாக கூறப்படுகிறது. கரூரில் முகாமிட்டு தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகிறது.