அரசியல்

கமலாலயம் டூ பனையூர்.. தவெகவில் இணைகிறார் விஜயதரணி..?

பாஜக பிரமுகர் விஜயதரணி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலாலயம் டூ பனையூர்.. தவெகவில் இணைகிறார் விஜயதரணி..?
Vijayadharani
தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, விளவங்கோடு தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், பாஜக பிரமுகருமான விஜயதாரணி, முதலமைச்சர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேத்தியான விஜயதாரணி, பாரம்பரியமிக்க காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாயார் பகவதி, கடந்த 1977-ல் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தாயாரின் வழியில் காங்கிரஸில் இணைந்த விஜயதாரணி, கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டுத் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் ஆவார்.

காங்கிரஸ் டூ பாஜக: ஏமாற்றமளித்த அரசியல் நகர்வுகள்

தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய முக்கியத்துவமும், பதவிகளும் கிடைக்காததால் அதிருப்தியடைந்த விஜயதாரணி, கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை இல்லை எனக் குற்றம் சாட்டினார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2024 பிப்ரவரி 24 அன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி பாஜகவில் அவருக்கு விளவங்கோடு இடைத்தேர்தலிலோ அல்லது மக்களவைத் தேர்தலிலோ போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், கட்சியின் மாநிலப் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்ட போதும் அவருக்கு எந்தப் பதவியும் ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் கடந்த சில காலமாக கடும் வருத்தத்தில் இருந்து வந்தார் விஜயதரணி.

விஜய்யின் த.வெ.க-வில் புதிய பயணம்

கட்சி ஆரம்பிக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் த.வெ.க ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியுள்ள சூழலில், அங்கு இணைந்தால் மட்டுமே தனது அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என விஜயதாரணிக்கு நெருக்கமானவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன் அடிப்படையில், இன்று த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்திற்கு விஜயதாரணி வருகை தந்துள்ளார்.