அரசியல்

"Senior Generational Abuser அவர்களே!" – ஸ்டாலினை சீண்டிய தவெக ஐடி விங்..!

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளைக் கலாய்ப்பதற்கும், சமூக வலைதளங்களில் அனல் பறக்கப் பதிவுகளை வெளியிடுவதற்கும் தமிழக அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்த வகையில், பள்ளிக்கல்வித் துறை ஊழல் விவகாரத்தில் திமுகவைச் சீண்டும் வகையில் தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.


பள்ளிக்கல்வித் துறையில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, திமுகவைச் சரமாரியாக விமர்சித்திருக்கிறது தவெக ஐடி விங்.

‘ஸ்கிரிப்ட் ரெடி இல்லையா?’

திமுகவின் மூத்த தலைவரை மறைமுகமாகக் குறிப்பிட்டு, “Scripted Shooting நடத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு பதிவு, ரீல்ஸ் என வெளியிடும் Senior Generational Abuser அவர்களே! ஆபாசநிதியின் உயிர்நட்பு கைதானதற்கு இன்னும் shooting நடத்தவில்லையா? அப்பரசன்டிகள் Script எழுதித் தரவில்லையோ?” என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், கைது நடவடிக்கைகள் மற்றும் காவல் தொடர்பான விவகாரங்களில் திமுக தரப்பிலிருந்து முன்பு வெளியிடப்பட்ட காணொளிகளைச் சுட்டிக்காட்டியுள்ள தவெக ஐடி விங், இந்த விவகாரத்தில் மட்டும் ஏன் அதே பாணியில் பதிலடி கொடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊழல் நடந்தது உங்கள் ஆட்சியில்தானே?

தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை முன்வைத்து விமர்சனத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

“நிர்வாகத் திறனற்ற சித்தரஞ்சன் சாலை மூர்த்தி அவர்களின் தலைமையில் நடந்த துப்புக்கெட்ட ஆட்சியில்தான் பள்ளிக்கல்வித் துறையில் ஊழல் நடந்திருக்கிறது என்பதால் பதில் சொல்ல வெட்கமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அந்தப் பதிவு, திமுகவின் ஆட்சிப் பொறுப்பையும் நேரடியாக விமர்சித்துள்ளது.

நல்லதுக்கு மட்டும் கிரெடிட்; ஊழலுக்கு யார் பொறுப்பு?

தவெக ஆட்சியில் நடைபெறும் நல்ல திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கெல்லாம், அவை தங்களது ஆட்சியின் தொடர்ச்சி என்று திமுக தரப்பில் உரிமை கோரப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ள தவெக ஐடி விங், முந்தைய ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழலுக்கும் அதேபோல் பொறுப்பேற்க வேண்டாமா எனக் கேலி செய்துள்ளது.

“சீக்கிரம் shooting நடத்தி, மணிக்கு ஒரு ரீல்ஸ் ரிலீஸ் செய்யுங்கள், Sweet Uncle!” என்ற கிண்டலான வரிகளுடன் பதிவை முடித்துள்ளது.

சமூக வலைதள அரசியல் மீண்டும் சூடுபிடிக்கிறதா?

ஏற்கெனவே தமிழக அரசியலில் திமுக – தவெக இடையே வார்த்தைப் போர் தொடர்ந்து வரும் நிலையில், பள்ளிக்கல்வித் துறை ஊழல் விவகாரத்தை மையமாக வைத்து வெளியிடப்பட்டுள்ள இந்தப் பதிவு, சமூக வலைதள அரசியலின் அடுத்த சுற்றுக்கு வித்திட்டுள்ளது.

குறிப்பாக, எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எழுப்பிய கேள்விகளையும், தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் தவெக எதிர்கொள்ளும் விமர்சனங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அரசியல் சூழலில், இந்தப் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.