சேலம் தி.மு.க.வில் மேயர் ஆதரவு கவுன்சிலர்கள், முன்னாள் அமைச்சர் ஆதரவு கவுன்சிலர்கள் என வலுக்கும் இரு தரப்பு மோதலில், மேயர் அறையில் நுழைந்து எதிர்தரப்பு கவுன்சிலர்கள் கைகலப்பு செய்த விவகாரம் உதயநிதி வரை சென்றிருப்பதால் சேலம் அரசியலில் அனல் தெறிக்கிறது!
சமீபத்தில்தான், சேலம் மேயர் அறையில் நடந்த தாக்குதல், ஆபாசப் பேச்சுகள் பற்றி நமது இதழில் விரிவாக பதிவு செய்திருந்தோம். இந்த விவகாரத்தில், சேலம் மேயர் தரப்பு உதயநிதியை சந்தித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரனைப் பற்றி புகார் சொல்லி ஊர் திரும்பியிருப்பதால், மாஜி அமைச்சர் ராஜேந்திரனுக்கு தலைமை கட்டம் கட்டிவிடுமோ என அவரின் ஆதரவாளர்கள் அச்சம் அடைந்திருக்கிறார்கள்.
இதுகுறித்த விவரமறிந்த திமுக வட்டாரத்தில் பேசினோம். மேயர் மீது மத்திய மா.செயலாளரும் மாஜி அமைச்சருமான ராஜேந்திரன் ஆதரவு கவுன்சிலர்கள் தாக்குதல் நடத்திய விவகாரத்தை முதலில் ஸ்டாலின் விசாரிச்சிருக்கார். ராஜேந்திரனையும் கூப்பிட்டு விசாரிச்சிருக்கார். அப்போ அவர், 'நான் எதுவும் சொல்லலை தலைவரே, உள்ளிருப்புப் போராட்டம் செஞ்சது சம்பந்தமா அவங்களுக்குள்ளே அபிப்ராயப் பேதம். மேயர் தன்னிசையாய் செயல்படுறார். அதைத்தான் கவுன்சிலர்கள் கேட்கப் போயிருக்காங்க. பேச்சு வளர்ந்து விவாதம் ஆகிப்போச்சு. வேற ஒண்ணுமில்லை என்று விளக்கம் அளிச்சிருக்கிறார்.
தொடர்ந்து, ஓமலூரைச் சேர்ந்த தி.மு.க. மறுசீரமைப்பில நிர்வாகிகள் பலர் உதயநிதியை சந்திச்சு, 'ராஜேந்திரன், உட்கட்சி பிரிக்கப்பட்ட ஏற்காடு, ஓமலூர் ஆகிய பகுதிகளுக்கு ஒரு மா.செயலாளரையும், மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிக்கு ஒரு மா.செயலாளரையும் தன்னோட ஆதரவு ஆட்களுக்கு வாங்கி தரணும்னு ஆசைபடுறார். அதுக்கேத்த மாதிரிதான் ஏரியாவில பிரிப்பு, சேர்ப்பு எல்லாம் செய்யறார்ன்னு புகார் சொல்லிட்டு வந்திருக்காங்க.
அந்த நேரத்துல மேயரும் தனக்கு நடந்ததை சொல்ல டைம் கேட்டு வாங்கி உதயநிதியை சந்திச்சிருக்கார். அப்போது. 'வயசான காலத்துல பதவி மேல எனக்கு ஆசையில்லை. என்னை மேயர் ஆக்குன கட்சி நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிறேன். கட்சிக்கு நல்லது நினைச்சதுக்கு என்னை அவமானப்படுத்துறாங்க, என்ன செய்யட்டும்? என்று கேட்டிருக்கார். அதுக்கு உதயநிதி, சேலத்தில் நடக்கிறது எல்லாம் எனக்குத் தெரியும். நான் பார்த்துகிறேன்'னு தைரியம் சொல்லி அனுப்பியிருக்கிறார். மேயரை வரச்சொல்லி உதயநிதி பார்த்ததால, இப்ப மேயர் தரப்பு கவுன்சிலர்கள் தலைவர் ஸ்டாலினைப் பார்க்க ரெடியாகிக்கிட்டு இருக்காங்க மா.செ. ராஜேந்திரனைப் பத்தி இன்னும் பல விஷயங்களை இந்த சந்திப்புல கொட்டிடணும்ன்னு ஒரு முடிவோடு இருக்காங்க" என்றார்கள். இதுபற்றி மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, சின்னவரை சந்திச்சு பேசினேன். வேற எந்தப் பிரச்னையும் இல்லை” என்று டக்கென்று போனை வைத்துவிட்டார்.
மாஜி அமைச்சரும் மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன் போனை எடுக்காத சூழலில் அவரின் ஆதரவாளர்களிடம் பேசினோம். 'மேயர், மாவட்டத்தோட சுமூகமான உறவில்தான் இருந்தார். இப்ப யார் பேச்சையோ கேட்டுக்கிட்டு இப்படி நடக்கிறார். கட்சிக்கு விரோதமா செயல்பட்டவங்களைத்தான் அண்ணன் நீக்கினார். வேறு எதுவும் இல்லை" என்றார்கள்.
உண்மை எதுவோ!
LIVE 24 X 7









