தமிழ்நாட்டில் முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறிப் பள்ளி நிர்வாகிகளிடம் பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதில் ரூ.100 கோடி வரை மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பெயரும் இந்த வழக்கில் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டார்.
விசாரணையின்போது, கட்சி நிதி என்ற பெயரில் லஞ்சப் பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கின் விசாரணைக்கு அன்பில் மகேஷிடம் காவல் விசாரணை நடத்த வேண்டியிருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இவை காவல்துறை முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சென்னை காவல்துறையின் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் விசாரணை அடுத்தகட்டமாக எவ்வாறு செல்லும் என்பது கவனத்தைப் பெற்றுள்ளது.
LIVE 24 X 7









