பெரம்பூர் தொகுதி வெற்றி… முதலமைச்சர் மனு தள்ளுபடி…

பெரம்பூர் தொகுதி வெற்றி… முதலமைச்சர் மனு தள்ளுபடி…

பெரம்பூர் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Author: kazhugu k அரசியல்

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 1,20,365 வாக்குகளைப் பெற்ற விஜய், 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, பெரம்பூர் தொகுதி வாக்காளர் எஸ். தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்தார்.

விஜய் தன்னுடைய தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அசையாச் சொத்துகள் தொடர்பான விவரங்களை முழுமையாகத் தெரிவிக்கவில்லை என்றும், சில சொத்துகள் தொடர்பாகத் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளார் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தேர்தல் வழக்கை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி லட்சுமி நாராயணன் விசாரித்து வந்தார்.

காஞ்சிபுரம் வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட பண்ருட்டி கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 6-ஆம் தேதி, 30 கோடி ரூபாய்க்கு 3 ஏக்கர் விவசாய நிலத்தை விஜய் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலம் குறித்த விவரங்களை விஜய் தமது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கவில்லை என்றும் தினேஷ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

விஜய் வாங்கிய இதர சொத்துகளின் மதிப்பு, பத்திரங்கள் உள்ளிட்ட விவரங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக தினேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் 50 சென்ட் விவசாய நிலத்தை 1997-ஆம் ஆண்டு 30,000 ரூபாய்க்கு வாங்கியதாகவும், தற்போதைய சந்தை மதிப்பு 20 லட்சம் ரூபாய் எனவும் விஜய் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் விஜய் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி வாதிட்டார். 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் மற்றும் வருமான வரி தொடர்பான விவரங்கள் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், சொத்துகளை மறைக்கவில்லை என்றும், சிறு தவறுகள் இருந்தாலும் அவை தேர்தல் முடிவைப் பாதிக்கும் அளவுக்கு முக்கியமானவை அல்ல என்றும் முதல்வர் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது.

வாதத்தைக் கேட்ட நீதிபதி, முதலமைச்சர் விஜய் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சொத்துகளை மறைத்தது குறித்து தேர்தல் வழக்கு விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்த நீதிமன்றம், முதல்வர் விஜய்யின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவை விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் விஜய்யை எதிர்த்து திமுக சார்பில் ஆர்.டி. சேகர் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில், விஜய்யின் வெற்றியை எதிர்த்து அவர் தனியாக வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.