தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, டெல்லி அரசியலை துறந்து, மாநில அரசியலுக்குள் நுழையவிருப்பதால் தனது ஆதரவு வட்டத்தைப் பெருக்கிக் கொள்ளும்வகையில், மாவட்டச் செயலாளர் பதவிகளில் இடஒதுக்கீடு கேட்பதாக தகவல்கள் வருகின்றன. எனினும், அவரின் குரலை தி.மு.க. தலைமை உதாசீனப்படுத்துவதாக மகளிரணி நிர்வாகிகள் கொந்தளிக்கிறார்கள்!
இதுகுறித்து தி.மு.க. முன்னணி தலைவர் ஒருவர் நம்மிடம் விரிவாகப் பேசினார், "மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பொதுவாக அரசருக்குப் பிறகு அவரது ஆண் வாரிசுகளைத் தான் ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவார்கள். பெண் அரசிகள் இருந்த சாம்ராஜ்யங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதே பாணியில் தான் தி.மு.கவும் செயல்படுகிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் வந்தார், அவர் தன் மகன் உதயநிதியை அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார். உதயநிதிக்கு அடுத்து இன்பநிதியை கூர்தீட்டத் தொடங்கிவிட்டார்கள்.
அதேவேளையில், தங்கையை முற்றிலுமாக உதறிவிடாமல், டெல்லியின் திமுக முகமாக மாற்றினார் ஸ்டாலின், கருணாநிதி கூட டி.ஆர்.பாலுவுக்குத் தான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பொறுப்பைக் கொடுத்தார், ஆனால் ஸ்டாலின் அதை கனிமொழிக்கு வழங்கினார்.
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் காட்சிகள் மாறின. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடையவே, உதயநிதி எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். 'உங்களது காலத்திலேயே கட்சியிலும், ஆட்சியிலும் உதயநிதியை முன்னிலைப்படுத்துங்கள்' என குடும்ப உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியபோதும் அதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. கொளத்தூரில் அவர் தோற்றதன் மூலம் இயல்பாகவே உதயநிதி முன்னிலைக்கு வந்துவிட்டார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அவர் வெகு விரைவாக கட்சித் தலைவர் பதவியிலும் அமர்த்தப்படலாம்.
தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம் தாறுமாறாக மாறிவிட்ட சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பினை முழுமையாக மாற்ற ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். அதன்படி, 77 கட்சி ரீதியான மாவட்டங்களை 110 ஆக உயர்த்தியிருக்கிறார். மேலும், சீனியர்களை ஓரங்கட்டிவிட்டு இளைஞர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிப்பது என்ற முடிவுக்கும் அவர் வந்திருக்கிறார். இதன்மூலம், ஏற்கெனவே உள்ள 77 மா.செக்களில் குறைந்தது 50 பேராவது மாற்றப்படவிருக்கிறார்கள். அதேபோல், புதிதாக 33 பேர் சேர்க்கப்படவிருக்கிறார்கள். இந்த சூழலில்தான், தான் தலைமை தாங்கும் மகளிரணிக்கு 10 சதவிகித உள் இடஒதுக்கீட்டை கேட்கிறார் கனிமொழி எனச் சொல்லப்படுகிறது.
த.வெ.க.வில் உள்ள 155 மா.செ.க்களில், வடசென்னைக்கு எம்.எல்.ஏ. பல்லவி, செங்கல்பட்டு வடக்கிற்கு எம்.எல்.ஏ. காமாட்சி, கரூர் தெற்குக்கு எம்.எல்.ஏ. சத்யா, நீலகிரி கிழக்கிற்கு பாமா ரமேஷ், ராமநாதபுரம் கிழக்கிற்கு மலர்விழி ஜெயபாலா, திருச்சி மாநகருக்கு சந்திரா, திருப்பூர் தென்கிழக்கிற்கு எம்.எல்.ஏ. சத்யபாமா, விருதுநகர் தென்கிழக்கிற்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி, விருதுநகர் மேற்குக்கு அமைச்சர் கீர்த்தனா என 9 மகளிர் மா.செக்களாக இருக்கின்றனர். அதாவது, 100க்கு 5.81 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. புதிய கட்சிக்கே சுமார் 6 சதவிகிதம் என்றால், பவளவிழா கண்ட கட்சியில் குறைந்தது 10 சதவிகிதமாவது மகளிருக்கு மா.செ. பொறுப்பில் இடமளிக்க வேண்டுமென கனிமொழி டிமாண்ட் வைத்திருக்கிறார் என தகவல் கசிகிறது.
புதிய மா.செக்கள் ஒன்றும் இப்போதே நியமிக்கப்படப்போவதில்லை, உட்கட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது, அப்போதுதான் தேர்வுசெய்யப்படுவார்கள். அதுவரை கட்சியில் இப்போதிருக்கும் நிலையே நீடிக்கவேண்டும் என்பது உதயநிதியின் விருப்பம். ஆனால் கனிமொழியோ, 'உட்கட்சித் தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம், அதுவரைக்கும் பொறுமை காக்காமல், மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும், அதிலும் மகளிருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்' என நினைக்கிறார். இருவரும் தங்களது எண்ணத்தை ஸ்டாலினிடம் சொல்ல, அவரோ முடிவெடுக்க முடியாமல் அமைதி காக்கிறார்.
இன்னொரு பக்கம், மாநில அரசியலுக்குள் தீவிரமாக நுழையும் முயற்சியிலும் கனிமொழி இருக்கிறார் என்கிறார்கள். திருச்சி கிழக்கில் த.வெ.க. சார்பில் த்ரிஷா நிறுத்தப்பட்டால் 'அங்கு கனிமொழியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள். எனினும், கனிமொழி மாநில அரசியலுக்கு வருவது உறுதி. இது உதயநிதிக்கு வைக்கும் செக் என்பது மட்டும் நிதர்சனம்” என சொல்லி முடித்தார்.
கனிமொழி ஆதரவாளர் ஒருவர் நம்மிடம், "கட்சியில் இருக்கும் ஒரே பெண் மா.செ. முன்னாள் அமைச்சர் கீதாஜீவன். அவரும் கருணாநிதியின் 'முரட்டு பக்தர்' பெரியசாமியின் மகள் என்பதால்தான் அப்பொறுப்புக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் அங்கையற்கண்ணி என்பவர் முன்பிருந்தார், அதன்பிறகு இதுவரை மகளிருக்கு மா.செ பொறுப்பே கொடுக்கப்படவில்லை. அதனால் கனிமொழி எதிர்பார்க்கிறார் என்றாலும்கூட, மா.செ. பதவி மகளிருக்கு கொடுக்க தி.மு.க தலைமை தயாராகவே இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட கனிமொழி விருப்பம் தெரிவித்தார். அதையறிந்தே அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட முதலில் மறுத்தார், பின்னர் சென்னைக்கு அழைத்து சிலர் அவரிடம் பேசவே, போட்டியிட சம்மதித்தார்.
இப்படி பொதுத்தேர்தலிலேயே கனிமொழிக்கு சீட் கொடுக்காத தலைமையா இடைத்தேர்தலில் சீட் கொடுக்கப்போகிறது?
கன்னியாகுமரியில் கனிமொழி ஆதரவாளர் என்பதாலேயே முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் கொடுக்கப்படவில்லை. ஆஸ்டினுக்கு சீட் கொடுக்க வேண்டாம், ஹெலன் டேவிட்சனுக்கு சீட் கொடுக்குமாறு கனிமொழி கேட்டுக்கொண்டும், விடாப்பிடியாக ஆஸ்டினை நிறுத்தியது.
தலைமை. கனிமொழி தனித்து தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மூன்றாக இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏழாக உயர்த்தினார்கள். ஆணாதிக்க சமூகம் இருக்கும்வரை கனிமொழி போன்ற துணிச்சலான பெண்கள் தலைதூக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை!" என்றார்.
இவ்விஷயத்தில் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கருத்தறிய பலரைத் தொடர்புகொண்டோம், ஒருவரும் கருத்துச் சொல்ல முன்வரவில்லை.
வெளியே சமூகநீதி பேசும் கட்சிக்குள், உள்ளே சமநீதிகூட இல்லை என்றால், என்ன அர்த்தம்?
LIVE 24 X 7









